Last Updated : 05 Jul, 2016 02:36 PM

 

Published : 05 Jul 2016 02:36 PM
Last Updated : 05 Jul 2016 02:36 PM

குமரியில் தொல்காப்பியர் சிலை: உயர் நீதிமன்றம் அனுமதி

குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் தொல்காப்பியரின் வெண்கல சிலை திறக்க உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை அமைப்புச் செயலர் த.சுந்தரராசன் (70), உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழின் முதல் இலக்கண நூல் தொல்காப்பியம். இதனை எழுதிய தொல்காப்பியர் குமரி மாவட்டம் கப்பிக்காட்டில் பிறந்தவர். தொல்காப்பியரின் தமிழ் சேவையை பாராட்டும் வகையில் அவர் பிறந்த காப்பிக்காட்டில் சதாசிவம் மனோன்மணிபுரம் தேவஸ்தானத்துக்கு சொந்தமான இடத்தில் ஐந்தரை அடி உயரம், 4 அடி அகலம், 700 கிலோ எடையில் தொல்காப்பியரின் வெண்கல சிலை, 11 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விளாத்துறை ஊராட்சியில் அனுமதி பெறப்பட்டுள்ளது.

தொல்காப்பியர் சிலையை ஜூலை 10-ல் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி சிலையை திறந்து வைக்கிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். சிலை திறப்பு விழாவுக்கு பாதுகாப்பு கோரி புதுக்கடை காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தோம். ஆனால் காவல் ஆய்வாளர் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறார்.

தொல்காப்பியர் ஜாதி, மதம் கடந்தவர். தொல்காப்பியர் உலகத்தமிழர்களின் அடையாளம் ஆவார். அவரின் சிலையை திறப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராது. மேலும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சிலை திறக்க அனுமதி பெற வேண்டியதில்லை. இதனால் சிலை திறப்புக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எஸ்.விமலா முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் எம்.புனிததேவகுமார் வாதிடும்போது, ‘தனியார் நிலங்களில் சிலை திறக்க அரசிடம் அனுமதி பெற வேண்டியதில்லை என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி காவல் ஆய்வாளர் இடையூறு ஏற்படுத்தி வருகிறார் என்றார்.

பின்னர், ‘தொல்காப்பியர் சிலை திறப்பு விழாவுக்கு போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். சிலையின் பாதுகாப்புக்காக சிலையை சுற்றி வேலி அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x