Published : 16 Jul 2016 07:54 AM
Last Updated : 16 Jul 2016 07:54 AM

போலி டெபிட் கார்டு மூலம் மோசடி: 3 பேர் கைது

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை முதலாவது பிரதான சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. கடந்த 10-ம் தேதி இங்கு வந்த இளைஞர் ஒருவர் தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, டெபிட் கார்டு கொடுத்துள்ளார். அது போலி கார்டு என்று சந்தேகம் அடைந்த பங்க் ஊழியர்கள் இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதே இளைஞர் மீண்டும் பெட் ரோல் பங்க்குக்கு வந்தபோது, ரகசியமாக போலீ ஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அவரிடம் காவல் ஆய்வாளர் ஜான்சுந்தர் விசா ரணை நடத்தினார். அந்த இளைஞர் பெயர் உதயக் குமார் (39), சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவர். போலி டெபிட் கார்டுகள் தயாரித்து மோசடி செய்த வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப் பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையாகி வந்த பிறகும் மீண்டும் அதே மோசடியில் ஈடுபட்டுள்ளார். போலி கார்டுகள் தயாரிக்க அரும்பாக்கத்தை சேர்ந்த சங்கர் (40), ஜீவா (45) ஆகியோர் அவருக்கு உதவி செய்துள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

3 பேரும் சேர்ந்து போலி கார்டுகள் மூலம் பல லட்சம் மோசடி செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது. அவர்களிடம் இருந்து 3 பைக், லேப்டாப், செல்போன், டெபிட் கார்டு தயாரிக்க பயன்படுத்திய இயந்திரம், 2 போலி கார்டுகள், ரூ.5,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

உஷாராக இருக்க ஆலோசனை

டெபிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து வங்கி அதிகாரிகள் கூறிய ஆலோசனைகள்:

பொதுவாக போலி கிரெடிட், டெபிட் கார்டுகளை ‘குளோனிங்’ முறையில் தயாரிக்கின்றனர். பெட்ரோல் பங்க், ஹோட்டல், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் நாம் கார்டுகளை தேய்க்கும் ‘பாயின்ட் ஆஃப் செல்லிங்’ என்ற கையடக்க கருவி இருக்கும். அதில் போலி சாப்ட்வேர் பயன்படுத்தி நம் கார்டில் உள்ள பெயர், கார்டு எண், ரகசிய எண் (பாஸ்வேர்டு) போன்றவை திருடப்படுகின்றன. அந்த விவரங்களைக் கொண்டு போலி கிரெடிட், டெபிட் கார்டுகள் தயாரிக்கின்றனர்.

எனவே முடிந்தவரை, கண்எதிரில் மட்டுமே டெபிட் கார்டுகளை பயன்படுத்த வேண்டும். ஹோட்டல், பெட்ரோல் பங்க் போன்ற இடங்களில் ஊழியர் களிடம் கார்டை கொடுத்தனுப்பி, தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். நம் கார்டு மூலம் பணம் எடுக்கும்போது, உடனே அதுகுறித்த குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) நம் செல்போனுக்கு வரும் வசதியை செய்துகொள்ள வேண்டும்.

ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கும்போது, வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்துகிறோம். அப்போதும் நம் வங்கிக் கணக்கு விவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நம்பகத்தன்மை மிக்க இணையதளங்களில் மட்டுமே பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x