Published : 11 Sep 2016 03:50 PM
Last Updated : 11 Sep 2016 03:50 PM

பரம்பிக்குளம் அணையின் பராமரிப்புப் பணிகளை பார்வையிட அனுமதி மறுப்பதா?- வாசன் கண்டனம்

கேரள வனத்துறையினர் தமிழக அதிகாரிகளை பரம்பிக்குளம் அணையின் பராமரிப்பு பணிகளை பார்வையிடவிடாமல் தடுத்து நிறுத்தியது கண்டிக்கத்தக்கது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டத்தின் படி அணைகளைப் பார்வையிடும், பாதுகாக்கும், பராமரிக்கும் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டத்தின் படி தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கு தண்ணீர் பகிர்ந்து வழங்கப்பட வேண்டும். திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டப் பகுதிகளில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் இத்திட்டத்தினால் கிடைக்கின்ற தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயிகளும், பொது மக்களும் பயனடைகிறார்கள்.

தமிழக - கேரள எல்லையில் கேரளப் பகுதியில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணையினை பராமரிப்பதும், பாதுகாப்பதும், நீர் மேலாண்மை குறித்தும் தமிழக அரசு பணியினை மேற்கொண்டு வருகிறது. எனவே அணையில் ஏதேனும் பராமரிப்பு பணிகள் நடைபெற்றால் அதனை பார்வையிட தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் செல்வது வழக்கமான ஒன்று. தற்போது பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தில் உள்ள அணைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று பரம்பிக்குளம் அணையின் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக தமிழகத்தில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரம்பிக்குளம் அணை இருக்கும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அணை இருக்கும் தூரத்தில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வாகனங்களை கேரள வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அணைகளைப் பார்வையிட கேரள வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து, வாக்குவாதத்திலும் ஈடுபட்டு, பரம்பிக்குளத்தை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தினர். இதனால் பல மணி நேரம் காத்திருந்த தமிழக அதிகாரிகள் தமிழகம் திரும்பினர்.

ஏற்கெனவே இதே போல் கேரள வனத்துறையினர் தமிழக அதிகாரிகளை அணையின் பராமரிப்பு பணிகளை பார்வையிடவிடாமல் பலமுறை தடுத்து நிறுத்தியதும் குறிப்பிடத்தக்கது. கேரள வனத்துறையினரின் இச்செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதனை கேரள அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழகத்தை வஞ்சிக்கின்ற செயலாகும்.

இரு மாநிலத்திற்கும் இடையேயான நீர்ப்பாசனத் திட்டத்திற்கு நியாயத்தின் அடைப்படையில் அணையின் விவகாரத்தில் இரு மாநில அரசும் ஒற்றுமையோடும், ஒத்துழைப்போடும் செயல்பட வேண்டும் என்பது தான் நியதி. எனவே பரம்பிக்குளம் - ஆழியாறு நீர்ப்பாசனத் திட்டத்திபடி அணைகளை பார்வையிடும், பாதுகாக்கும், பராமரிக்கும் தமிழக அரசின் உரிமைகளை நிலைநாட்ட தமிழக அரசு - கேரள அரசோடு உடனடியாக பேசி நல்ல தீர்வு காண வேண்டும்.

மேலும் மத்திய அரசு இந்தப் பிரச்சனை சம்பந்தமாக கேரள அரசை கண்டிப்பதோடு, ஒப்பந்தப்படி தமிழகத்துக்கு உரிய நியாயத்தைப் பெற்றுத்தர வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x