Published : 17 Jan 2014 07:06 PM
Last Updated : 17 Jan 2014 07:06 PM

ஓசூர் உழவர் சந்தையில் காய்கறி விற்பனை ‘ஜோர்’: பொங்கல் வர்த்தகத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கல் விழாவை முன்னிட்டு சில நாட்களாக ஓசூர் உழவர் சந்தையில் அதிக அளவில் காய்கறிகள் விற்பனையாகின.

தமிழகத்தில் திருப்பூர் உழவர் சந்தையில்தான் தினந்தோறும் அதிக அளவில் காய்கறி, பழங்கள் விற்பனையாகும். அதற்கு அடுத்தபடியாக ஓசூர் உழவர் சந்தையில் நாளொன்றுக்கு 100 டன்னுக்குக் குறையாமல் காய்கறி, பழ வர்த்தகம் நடக்கும். விழாக் காலங்களில் ஓசூர் உழவர் சந்தையில் வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகள் விற்பனையாகும்.

அந்த வகையில், கடந்த திங்கள்கிழமை முதல் நேற்று வரை பொங்கல் விழாவையொட்டி ஓசூர் உழவர் சந்தையில் அதிக அளவில் காய்களி, பழங்கள் விற்பனையாகின.ஓசூர் உழவர் சந்தையில் தினமும் 70-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த காய்கறி, பழங்கள் விற்பனையாகும். திங்கள்கிழமையும் வழக்கமாக விற்பனைக்கு வரும் தக்காளி, கத்தரி, வெண்டை, பீர்க்கன், கேரட், பீட்ரூட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளுடன், விழாக்கால சிறப்புப் பொருளான சர்க்கரை வள்ளிக்கிழங்கு 3.5 டன்னும், மொச்சை அவரை 3.75 டன்னும் விற்பனைக்குக் குவிக்கப்பட்டது. மேலும், காப்புகட்டும் பூ, செங்கரும்பு ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டன.

வழக்கமாக 250 விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தைக்கு வருவர். ஆனால் 13-ம் தேதி 312 விவசாயிகள், தங்கள் பொருட்களை விற்க உழவர் சந்தைக்கு வந்திருந்தனர். அன்று 122 டன் அளவுக்கு காய்கறி, பழங்கள் விற்பனையானது. சாதாரண நாட்களில் ரூ.15 முதல் ரூ.16 லட்சம் வரை வர்த்தகம் நடக்கும். ஆனால் 13-ம் தேதி ரூ.19 லட்சத்துக்கு வர்த்தகம் நடந்தது. அதேபோல 14-ம் தேதி ரூ.17 லட்சம் மதிப்பிலான 114 டன் விளை பொருட்கள் விற்பனையாகின என்று உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மேகநாதன் தெரிவித்தார்.

மல்லிகை கிலோ ரூ.1,000

பொங்கல் விழாவின்போது மல்லிகைப் பூ அதிக விலைக்கு விற்பனையாகியது. ஏறத்தாழ ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனையானது. தக்காளி, கத்தரி, வெண்டை ஆகியவை கிலோ ரூ.3 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு வாரங்களாக மொச்சை அவரை அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் காய் என்பதால் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வாங்கினர். மொச்சை அவரை கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x