Published : 18 Jul 2016 09:39 AM
Last Updated : 18 Jul 2016 09:39 AM

விலை நிர்ணயத்தை மத்திய அரசே ஏற்கக்கோரி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சென்னையில் 26-ல் உண்ணாவிரதம்

பெட்ரோல், டீசல் விலையை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் ஜூலை 26-ம் தேதி உண்ணாவிரதம் நடக்கிறது.

தமிழ்நாடு பாரத் பெட்ரோலி யம் பங்க் உரிமையாளர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் கே.எஸ்.தென்னரசு கூறியதாவது:

பெட்ரோலிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தாங்களாகவே நிர்ணயித்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இதன் காரணமாக, 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதனால், பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளர்கள் கடு மையான இழப்பை சந்தித்து வருகின்றனர்.

விலை குறைந்தால் முன்கூட்டியே கொள்முதல் செய்த பெட்ரோல், டீசலை நஷ்டத்துக்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும். மேலும் விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்காமல், மத்திய அரசே ஏற்க வேண்டும்.

கமிஷனை உயர்த்த வேண்டும்

பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களுக்கு வழங்கும் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாடு பெட்ரோல் விற்பனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இவ்வாறு தென்னரசு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x