Last Updated : 05 Mar, 2017 11:11 AM

 

Published : 05 Mar 2017 11:11 AM
Last Updated : 05 Mar 2017 11:11 AM

தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க வைக்கும் குறும்படம்: பாளையங்கோட்டை கல்லூரி மாணவரின் கைவண்ணம்

`வற்றவிடலாமா ஜீவநதியை’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி மாணவர் அபிஷ்விக்னேஷ் உருவாக்கியுள்ள 3 நிமிட விழிப்புணர்வு குறும்படம், தாமிரபரணியை நேசிப்போரை யோசிக்க வைத்திருக்கிறது. தாமிரபரணியிலிருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இக்குறும்படம் கவனம் பெற்றுள்ளது.

வற்றாத ஜீவநதி

தாமிரபரணி நதி பொதிகை மலையில் தோன்றி, 120 கி.மீ. பாய்ந்து, திருச்செந்தூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. வற்றாத இந்த ஜீவநதி, 7 தடுப்பு அணைக் கட்டுகள், 11 கால்வாய்கள் மூலம், திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 88 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பை விளைய வைக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் 1 நபருக்கு சராசரியாக 40 லிட்டர் வீதம் தினமும் குடிதண்ணீர் தரும் நீர் ஆதாரம் தாமிரபரணிதான். இதற்காக நதியில் வழியெங்கும் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு 1 மணி நேரத்துக்கு ஒவ்வொரு பகுதியில் இருந்தும் 1 கோடி லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

தாயாக விளங்கும் தாமிரபரணி, கடந்த 10 ஆண்டுகளாகவே அழிந்து கொண்டிருக்கிறது. வரம்புக்கு மீறி மணலை அள்ளி இயற்கையான நீர் ஊற்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன. நதிக் கரையோர நகரங்கள், தொழிற்சாலைகளில் இருந்து கழிவுகள் கொட்டப்படுகின்றன. பல தலைமுறையாக வற்றாமல் ஓடிக்கொண்டிருந்த தாமிரபரணி, இவ்வாண்டு இரு பருவத்திலும் மழை பொய்த்ததால் வற்றியது. இது, இயற்கை ஆர்வலர்களை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. தற்போது மிகக்குறைந்த அளவுக்கே தண்ணீர் ஓட்டம் உள்ளது.

3 நிமிட குறும்படம்

இந்நிலையில்தான், தாமிரபரணி நதியிலி ருந்து குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இச்சூழலில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி,

காட்சி தொடர்பியல் மாணவர் அபிஷ்விக் னேஷின், `வற்றவிடலாமா ஜீவநதியை’ என்ற குறும்படம் கவனம் பெற்றிருக்கிறது.

இந்த 3 நிமிட குறும்படத்தின் முதல் பாதியில், தாமிரபரணி தனது பெருமையை மார்தட்டிப் பேசுவதாகவும், அடுத்த பாதியில், நதி எப்படியெல்லாம் அழிகிறது, மக்கள் எப்படி பாதிப்படைவார்கள் என்பதை தாமிரபரணி கதறியபடி சொல்வதாக அமைத்துள்ளார். பசுமை யுடன் தண்ணீர் பொங்கி வழியும் தாமிரபரணி கடைசியில், மணல் கொள்ளையால் வறண்ட பாலைவனமாக காட்சியளிக்கும் அவலநிலை யைப் பார்க்கும்போது மனசு பதைபதைக்கிறது.

ஓரணியில் திரளவேண்டும்

மாணவர் அபிஷ்விக்னேஷ் கூறும்போது, ``தாமிரபரணியை எப்படியும் மீட்க வேண்டும். சாக்கடையை கலக்க விடக்கூடாது. நிரந்தரமாக மணல் அள்ளக்கூடாது. குடிதண்ணீரை விற்கக் கூடாது என்ற நிரந்தர உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். வருங்காலத்தில் நமக்கு சவாலாக இருக்கும் குடிதண்ணீர் பிரச்சினையை போக்க வேண்டும் என்றால், தாமிரபரணியை காப்பாற்ற வேண்டும். அதற்காக தாமிரபரணியே நம்மிடம் பேசுவது போல இந்த விழிப்புணர்வு படத்தினை உருவாக்கியுள்ளேன். இதை பார்க்கும் ஒவ்வொருவரும் தாமிரபரணியைக் காப்பாற்ற ஓரணியில் திரளவேண்டும் என்பதே என் ஆசை” என்றார் அவர்.

குறும்படத்தில் பழம்பெரும் நாடக நடிகையான நெல்லை அம்பிகா ஐயப்பன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். தாமிரபரணி தாயாக நம்மை நோக்கி புலம்பி ‘என்னை காப்பாற்றுங்கள்’ என கெஞ்சும்போது கரையாத மனமும் கரைந்து விடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x