Published : 20 Aug 2016 06:46 PM
Last Updated : 20 Aug 2016 06:46 PM

ஜி.கே.வாசன் காங்கிரஸில் இணைய வந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வோம்: இளங்கோவன்

ஜி.கே.வாசனுக்கு இனி காங்கிரஸில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி வருவதாக அவர்கள் தெரிவித்தால் பெருந்தன்மையோடு மன்னித்து ஏற்றுக் கொள்வோம் என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 72-வது பிறந்த தினவிழா நேற்று காங்கிரஸ் கட்சி அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொண்டாடப்பட்டது.

அதன் பிறகு ஈவிகேஎஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. இது தமிழக முதல்வரின் உத்தரவு தானேயன்றி, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவாக தெரியவில்லை. இப்படியேப் போய் கொண்டிருந்தால் இனி சட்டப்பேரவைக் கூட்டத்தை போயஸ் தோட்டத்தில் நடத்தலாம்.

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி பிரதமரை நேரில் சென்று வலியுறுத்த வேண்டும். நான் எனது பதவியை ராஜினாமா செய்து விட்டேன். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இனி அந்தப்பதவிக்கு நான் வர வாய்ப்பு இல்லை. விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படுவார்.

உள்ளாட்சி தேர்தலிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடரும். ஜி.கே.வாசனுக்கு காங்கிரஸில் இணைவதைத் தவிர வேறு வழியில்லை. தங்களது தவறை உணர்ந்து அவர்கள் வருவதாக தெரிவித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் பெருந்தன்மையுடன் மன்னித்து ஏற்றுக்கொள்வார்கள்.

இலங்கையில் முகாம்களில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு விஷஊசி போட்டு கொல்லப்பட்டது உண்மை என்றால், சம்பந்தப்பட்ட வர்களுக்கு தீவிரவாதிகளுக்கு நிகரான தண்டனை வழங்க வேண்டும்'' என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x