Published : 13 Jul 2016 08:14 AM
Last Updated : 13 Jul 2016 08:14 AM

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானிக்காக ஒட்டகத்தை வெட்ட மிருகவதை சட்டம் அனுமதி அளித்துள்ளதா? - மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

பக்ரீத் பண்டிகையின்போது குர்பானிக்காக ஒட்டகத்தை வெட்டுவதற்கு மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்டக்கூடாது என்றும், மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றச்செயல் என்றும் கூறி இதற்கு தடை கேட்டு இந்திய கால்நடைகளுக்கான மக்கள் இயக்கச் செயலாளர் அருண் பிரசன்னா உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ஒட்டகங்கள் மாநகராட்சியின் இறைச்சிக் கூடங்களில் வெட்டப்படாமல், பொதுமக்கள் முன்னிலையில் வெட்டப்படுகின்றன. உணவுக்கான இறைச்சி விலங்குகள் பட்டியலில் ஒட்டகம் இல்லை. எனவே குர்பானிக்காக ஒட்டகங்களை சட்டவிரோதமாக வெட்டுவதை தடை செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலங்குகள் பலியிடப்படுவது வழக்கமான ஒன்று. ஆண்டுக்கு ஒரு முறைதான் ஓட்டகங்கள் வெட்டப்படுகின்றன. தற்போது ஒட்டகங்களை வெட்ட இந்திய விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.

குழு அமைப்பு

இந்த வழக்குகளை கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பான பரிந்துரைகளை அளிக்க கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை, சாலைப் போக்குவரத்துத் துறை, சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள், தமிழக தலைமை ஹாஜி ஜலாலுதீன் முகமது அயூப் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு: ஒட்டகங்கள் வெட்டப்படுவது தொடர்பான இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு கடைசி சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. 2 வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்கவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும். மேலும், இந்த வழக்கில் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம். மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒட்டகங்களை வெட்டுவதற்கு சட்டப்படியான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? அவற்றை வெட்ட மாநகராட்சி நிர்வாகம் தனியாக இடங்களை ஒதுக்கியுள்ளதா?

தமிழகத்தில் ஒட்டகங்கள் கிடையாது. எனவே, இந்த ஒட்டகங்கள் எப்படி தமிழகத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன? சென்னை மாநகராட்சி சட்டத்தின்படி, பொது இடங்களில் ஒட்டகத்தை வெட்ட அனுமதி வழங்க ஆணையருக்கு அதிகாரம் உள்ளதா? இந்த கேள்விகளுக்கு விரிவான பதில் மனுவை மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தாக்கல் செய்யவேண்டும் எனக்கூறி விசாரணையை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x