Published : 20 Sep 2013 11:31 AM
Last Updated : 20 Sep 2013 11:31 AM

திருச்சியில் கட்டிடம் சரிந்து விழுந்து 3 பெண்கள் பரிதாப சாவு

திருச்சி சிங்காரத்தோப்பு பேருந்து நிலைய நிறுத்தம் அருகே வணிக வளாகம் ஒன்று கட்டும் பணி நடந்து வருகிறது. அதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகள் சில தினங்களாக நடைபெற்று வருகின்றன. வியாழக்கிழமை மதியம் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும்போது அணிய வேண்டிய தலைக்கவசம் எதுவும் அணியாமல் பத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் அஸ்திவாரம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது அருகேயுள்ள உணவகத்தில் பத்து அடி உயர சமையல் கூடத்தின் சுவர், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரிந்து விழுந்தது. கூடவே அந்த சமையல் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு பெரிய ஜெனரேட்டர்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் சரிந்து விழுந்து தொழிலாளர்களை நசுக்கியது. இந்த இடிபாடுகளில் ஆறு பேர் சிக்கிக்கொண்டனர்.

உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் கூச்சல் போட்டு உதவிக்கு அழைத்தனர். பொதுமக்கள் திரண்டு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவம் பற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினர், காவல் துறையினர், மாநகராட்சி அலுவலர்கள் திரண்டு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் இடிபாடுகளில் சிக்கிய பெண் தொழிலாளர்iகள், சமயபுரம் மருதூரைச் சேர்ந்த கண்ணன் மனைவி கண்மணி என்கிற தமிழ்செல்வி (27), அதே கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் மனைவி உமாராணி (35), மான்பிடிமங்கலம் கிராமம் சிங்காரம் மனைவி பூங்கோதை (50) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் கடுமையான காயத்துடனும் ஒருவர் லேசான காயத்துடனும் உயிர் தப்பினர்.

விபத்து நிகழ்ந்தது எப்படி?

இந்தக் கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சியில் முறைப்படி அனுமதி வாங்கப்பட்டிருந்த போதிலும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் கட்டிட உரிமையாளர், கட்டுமான ஒப்பந்ததாரர் பின்பற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது. அஸ்திவாரம் தோண்டும்போது அருகே கட்டடங்கள் இருந்தால் அவற்றிற்கு இடையே போதுமான இடைவெளி விட்டு தோண்ட வேண்டும் அல்லது தடுப்பு சாரங்கள் அமைத்து அஸ்திவாரம் தோண்டவேண்டும் என்கிற விதிகள் இங்கே சுத்தமாக பின்பற்றப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் கட்டுமானப் பணியாளர்களுக்கு தலைக்கவசம் இல்லை. அதனால் இவர்கள் உயிர் பிழைக்க வழியே இல்லாமல் போய்விட்டது.

திருச்சியில் சில தினங்களாக பெய்த மழையில் கட்டுமானம் நடைபெற்ற இடத்தில் மண் இளகியிருந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த உணவு விடுதியில் ஓடிக்கொண்டிருந்த ராட்சத ஜெனரேட்டர்கள், மாவு அரைக்கும் இயந்திரங்கள் ஏற்படுத்திய அதிர்வு காரணமாகவும் அங்கே மண் மேலும் இளகி சுவர் சரிந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கும், திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ, மாநகர காவல் ஆணையர் சைலேஷ்குமார் யாதவ், மாநகராட்சி ஆணையர் தண்டபாணி ஆகியோர் வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x