Published : 20 Jun 2015 10:33 AM
Last Updated : 20 Jun 2015 10:33 AM

குன்னூர் அருகே கிராமத்தை காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு: இன்று வீடுகள் இடிக்கப்படுமா? அச்சத்தில் மக்கள்

குன்னூர் அருகே ஒரு கிராமத்தை காலி செய்ய நீதிமன்றம் விடுத்திருந்த கெடு, இன்றுடன் முடிவடைவதால், கிராம மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்டது கெந்தளா கிராமம். இந்த கிராமத்தின் ஒரு பகுதியான ஜீவா நகரில் சுமார் 70 வீடுகள் உள்ளன. இதில், சுமார் 350 பேர் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர்கள், இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜீவா நகர் உள்ள இடம் யாருக்குச் சொந்தம் என்பதில் இழுபறி நிலவுகிறது.

கடந்த 1962-ல் கள்ளாகவுடர் என்பவருக்கும் தேவிஅம்மாள் என்பவருக்கும் இடையே நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக வழக்கு நடந்துள்ளது. இதில், தேவிஅம்மாளுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

அவர், இங்கு வசிப்பவர்களை, தொடர்ந்து இடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளார். இதனால், ஜீவா நகர் மக்கள் வீடுகளைக் கட்டி குடியேறி விட்டனர்.

இந்நிலையில், 1984-ம் ஆண்டு கள்ளாகவுடர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் நிலம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், கள்ளாகவுடருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால், இப் பகுதியில் வசிப்பவர்களை காலி செய்ய குன்னூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்த காலகட்டத்தில் கள்ளாகவுடர் இறந்து விட, அவரது பேரன் சிவராஜ் வழக்கை நடத்தி வந்துள்ளார்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் குன்னூர் நீதிமன்றம், கள்ளாகவுடர் நிலத்தில் குடியிருப்பவர்களை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்காக 6 மாத காலம் அவகாசம் அளித்து, 2015-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி வரை கெடு விதித்தது. இவர்களுக்கு மாற்றிடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டுதலும் வழங்கியது.

உத்தரவு வெளியானதும் ஜீவா நகர் மக்கள், மாவட்ட ஆட்சியர், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆகியவற்றுக்கு மனு அளித்தனர்.

நீதிமன்ற உத்தரவின்படி ஜீவா நகரை காலி செய்ய வேண்டும் என அதிகாரிகள் அங்குள்ளவர்களிடம் தெரிவித்து, நேற்று நோட்டீஸ் வழங்கினர்.

ஜீவா நகர் பொதுமக்கள் கூறியதாவது: இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். குடிநீர், மின்சாரம் மற்றும் வரி செலுத்தி வருகிறோம். இப்பகுதியில் உள்ள தோட்டங்களில் பணிபுரிவதே எங்கள் வாழ்வாதாரம். வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும். அருகிலேயே மாற்றிடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க உள்ளோம் என்றனர்.

நோட்டீஸ் காலம் முடிவடைந்துள்ளதால், இன்று வீடுகள் இடிக்கப்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x