Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

சிறுவன் ஜெயசூர்யாவுக்கு உதவிய நேசக் கரங்கள்- ‘தி இந்து’ செய்தியால் புதுவாழ்வு பெற்றான்: தாய் நெகிழ்ச்சி

ஜெயங்கொண்டம் அருகே வான திரையான்பட்டினத்தைச் சேர்ந்த சிறுவன் ஜெயசூர்யா தெருச்சண் டையை வேடிக்கை பார்க்கப் போன இடத்தில் கீழே தவறி விழுந்து கண்பார்வையை இழந்தான். மகனை குணப்படுத்தவும் அவனைப் படிக்க வைக்கவும் வழி தெரியாமல் அவனது தாய் ரேவதி கவலைப்பட்டுக் கொண்டி ருப்பது குறித்து ஜனவரி 28-ம் தேதியிட்ட `தி இந்து’வில், >`கண்ணை இழந்த மகனுக்காக கதறித் துடிக்கும் தாய்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

‘தி இந்து’ செய்தியைப் படித்துவிட்டு ரேவதியை தொடர்புகொண்ட பலபேர் தங்களால் இயன்றளவு நிதியுதவி அளித்துள்ளனர். கடந்த 9-ம் தேதி மாலை வரை சுமார் 21 ஆயிரம் ரூபாய் தனது வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்திருப்பதாக கண்ணீர் ததும்பிய வார்த்தைகளில் `தி இந்து’விடம் தெரிவித்தார் ரேவதி. இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: “தமிழ்நாடு முழுக்க இருந்து தம்பியைப் பத்தி விசாரிச்சாங்க சார். அத்தன பேரோட போன் நம்பரையும் குறிச்சி வைச்சிருக்கேன். கோயமுத்தூர், திருச்சி, திருநெல்வேலி, கும்பகோணம் ஊர்கள்ல மாற்றுத் திறனாளிப் புள்ளைங்களுக்கு பள்ளிக்கூடம் நடத்துறவங்க, ‘சூர்யாவ இங்க கொண்டாந்து விடுங்க; நாங்க படிக்கவைக்கிறோம்’னு சொன்னாங்க.

திருச்சியில கலையரசின்னு ஒரு டாக்டரம்மா, `பையன எங்கிட்ட கூட்டிட்டு வாங்க. டெஸ்ட் பண்ணி பார்வை வரவைக்க முயற்சி செய்வோம்’னு சொன்னாங்க. சென்னையில இருக்கிற ராமகிருஷ்ணா மடத்துலருந்து பேசுனாங்க. `உங்க பையனை நாங்க படிக்க வைக்கிறோம்; இங்க கூட்டிட்டு வாங்க’ன்னு சொன்னாங்க. இந்த வருசத்துப் படிப்பு இன்னும் மூணு மாசம் பாக்கி இருக்கு. அதை முடிச்சுட்டு டி.சி. வாங்கிட்டு வர்றேன்னு அவங்களுக்கு சொல்லிருக்கேன். நேத்துக் கூட சென்னை மாங்காட்டிலிருந்து பேசிய ஆசிரியர் ரஃபீக் ஞாயிற்றுக்கிழமை மாங்காட்டுக்கு தம்பியை கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க. நிதியுதவி பண்றதா சொல்லிருக்காங்க. எங்க தம்பியை படிக்க வைக்கிறதுக்கு ஒரு நல்ல இடம் கிடைச்சிருக்கு. இந்து பத்திரிகையை நாங்க எங்க உசுரு உள்ள வரைக்கும் மறக்கமாட்டோம்'' என்றார் ரேவதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x