Published : 28 Oct 2015 05:26 PM
Last Updated : 28 Oct 2015 05:26 PM

சீனப் பட்டாசு ஊடுருவலை தடுக்க மத்திய அரசு அஞ்சுகிறது: கார்த்திக் ஆவேசம்

'சீனப் பட்டாசுகள் விவகாரத்தில் மத்திய அரசு அஞ்சுகிறது. நம்மை விட பலம் வாய்ந்த நாடு சீனா என இந்தியா கருதுவதே அச்சத்திற்குக் காரணம்' என்று நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் கார்த்திக் கூறியுள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கார்த்திக் பேசியது:

''நடிகர்களை எந்தக் கட்சிகளும் இழிவுபடுத்த வேண்டாம். நடிகர்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்கும் கட்சிகளுடன் விவாதிக்கத் தயார்.

2008-ல் சீனப் பட்டாசுகள் வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இப்போதும் கன்டெய்னர்களில் சீனப் பட்டாசுகள் வந்துகொண்டிருக்கின்றன.

சிவகாசியில் 5 லட்சம் குடும்பங்கள் உள்ளன. பட்டாசுகள் விவகாரத்தில் சிவகாசி மக்கள் வயிற்றில் அடிக்காதீர்கள் என்று சொன்னேன். இந்த கேள்வி கேட்டது தப்பா? நான் தீவிரவாதியா? சிவகாசி செல்ல எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் தமிழன் இல்லையா? இந்தியன் இல்லையா? நான் பாஸ்போர்ட், விசா வாங்க வேண்டுமா?

நான் பொறுமையாக சென்றுகொண்டிருக்கிறேன். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

வெளிநாட்டில் இருந்து பட்டாசுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படுவதால் சிவகாசி மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கன்டெய்னர்களில் பட்டாசுகள் இறக்குமதி செய்யப்படுவது உளவுத்துறைக்கு தெரியாதா? மத்திய அரசு, மாநில அரசுக்கு தெரியாமல் எப்படி இருக்கும்? சீனப் பட்டாசுகளின் ஊடுருவல் தொடர்ந்தது எப்படி?

சீனப் பட்டாசுகள் விவகாரத்தில் மத்திய அரசு அஞ்சுகிறது. நம்மை விட பலம் வாய்ந்த நாடு சீனா என இந்தியா கருதுவதே அச்சத்திற்குக் காரணம். அதனால்தான் இன்னும் சீனப் பட்டாசுகளின் ஊடுருவல் தொடர்கிறது.

எல்லை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிப்பதாக இலங்கை அரசு சொல்கிறது.

கச்சத்தீவை ஏன் மீட்க முடியவில்லை? கச்சத்தீவை கொடுத்ததே தப்பு. கச்சத்தீவை மீட்பதாக கூறிய யாரும் இதுவரை மீட்கவில்லை. கச்சத்தீவு குறித்து பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கக்கூடாது. ஒடுக்கி ஆளும் அரசியல் மாற வேண்டும்'' என்று கார்த்திக் பேசினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x