Published : 02 Jan 2016 05:46 PM
Last Updated : 02 Jan 2016 05:46 PM

தரச் சான்று பெற்ற ‘அம்மா சீட்ஸ்’ விதைகள் விற்பனை: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சட்டப்பேரவையில் அறிவித்தபடி தரமான, சான்று பெற்ற ‘அம்மா சீட்ஸ்’ விதை விற்பனையை தொடங்கி வைத்த முதல்வர் ஜெயலலிதா, ரூ.28 கோடியே 51 லட்சம் மதிப்பிலான வேளாண்துறை கட்டிடங்களையும் திறந்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''வேளாண்துறை சார்பில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ரூ.ஒரு கோடியே 49 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 11 ஆயிரத்து 322 சதுரடியில் கட்டப்பட்டுள்ள உழவர் மையத்தை முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் மற்றும் குலசேகரத்தில் நவீன சேமிப்பு கிடங்குகள், ராமநாதபுரம் முதுகுளத்தூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகியவை ரூ.3 கோடியே 50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளன.

இவை தவிர தஞ்சை, சேலம், ஈரோடு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 27 கோடியே ஒரு லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட உழவர் மையங்கள், சேமிப்பு கிடங்குடன் கூடிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள், வேளாண்மை விரிவாக்க மையக் கட்டடங்கள், குளிர்பதன கிடங்கு , தோட்டக்கலை விரிவாக்கம் மற்றும் பயிற்சி மைய கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

அம்மா சீட்ஸ்

மேலும், தமிழக விசவாயிகள் சான்று பெற்ற விதைகளை அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில், அரசு விதைப்பண்ணைகள், விதை உற்பத்தி நிலையங்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து உரிய பணியாளர்களுடன் தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமை ஏற்படுத்தப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் தரமான சான்று பெற்ற விதைகள் ‘அம்மா சீட்ஸ்’ என்ற பெயரில் ’ அம்மா சேவை மையம்’ மூலம் நியாயமான விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி, ‘அம்மா சீட்ஸ் ’விதைகள் விற்பனையை தொடங்கி வைக்கும் விதமாக, 3 விவசாயிகளுக்கு விதைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

நீங்களே செய்து பாருங்கள்

தமிழகத்தில் நகர்ப்புற மக்களுக்கு தேவையான காய்கறிகளை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில் காய்கறி சாகுபடிக்கு தேவையான இடு பொருட்கள் அடங்கிய ‘நீங்களே செய்து பாருங்கள்’ - கிட்கள் சென்னை மற்றும் கோவையில் கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டம் நகர்ப்புற மக்களிடம் வரவேற்பு பெற்றுள்ளதால், நடப்பாண்டு முதல் திருச்சி மற்றும் மதுரைக்கு விரிவுபடுத்தும் வகையில் ரூ.5 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

காய்கறி சாகுபடிக்கு தேவையான இடு பொருட்கள் அடங்கிய ‘கிட்’களை 2 பயனாளிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x