Published : 09 Feb 2017 08:56 AM
Last Updated : 09 Feb 2017 08:56 AM

துரோகங்கள் வென்றது கிடையாது; அதிமுகவை வெல்லவே முடியாது: எம்எல்ஏக்கள் மத்தியில் சசிகலா ஆவேசம்

துரோகங்கள் ஒருபோதும் வென்றது கிடையாது. அதிமுகவை என்றும் வெல்லவே முடியாது என அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தெரிவித்தார்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு திடீரென மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்தார். அங்கு சுமார் 40 நிமிடங்கள் தியானத்தில் ஈடுபட்டார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ‘கட்டாயப்படுத்தி என்னை ராஜினாமா செய்ய வைத்தனர். நல்லவர் ஒருவர்தான் முதல்வராக வரவேண்டும்’ என தெரிவித்தார்.

ஓபிஎஸ் பேட்டியால் அதிமுக வில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போயஸ் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சசிகலா, கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி உத்தரவிட்டார். அவருக்கு பதிலாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, நேற்று காலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை 9 மணி முதலே எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலு வலகத்துக்கு வரத் தொடங்கினர். தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் ஒவ்வொருவராக வந்தனர்.

காலை, 11.30 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வந்தார். அடுத்த 5-வது நிமிடத்தில், எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். அப்போது, எம்எல்ஏக்களிடையே சசிகலா பேசியதாவது:

கடந்த 33 ஆண்டுகளில் எத்தனையோ நிகழ்வுகள், அதிர்ச்சிகள், ஜெயலலிதாவை நோக்கி வந்த பல துரோகங்களை அவருடன் இணைந்து நானும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் வென்றதைபோல இதையும் வெல்வோம். ஜெயலலிதா மறைந்தபோது இந்தக் கட்சியில் கலகம் வராதா என கண்ணி வைத்து காத்திருந்தனர். எதுவும் நடக்கவில்லை.

ஜெயலலிதா மறைந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் உட்பட பலரும் முதல்வராக பொறுப்பேற்கும்படி என்னை நிர்பந்தித்தனர். அப்போது எதையும் ஏற்கும் மனநிலையில் நான் இல்லை. அதிமுக அன்று பிளவுபட்ட நிலையில், மாற்று அணியில் இருந்து அவர் செய்த செயல்களை எல்லாம் மன்னித்துதான் ஜெயலலிதா அவருக்கு வாய்ப்பு வழங்கினார். பலமுறை அந்த வாய்ப்பை பெற்றார். அந்த வழியில் நானும் செயல்பட்டேன்.

ஆனால், அதன்பின் நடந்த நிகழ்வுகள், அனைத்தையும் உற்று நோக்கினேன். ஜெயலலிதாவை அழிக்கத் துடித்த திமுகவுடனான அவரின் செயல்கள், ஜெயலலிதா எதற்காக போராடினாரோ அதை ஈடேற்றும் விதத்தில் அமைய வில்லை. ஜெயலலிதா இல்லாத நேரத்தில் முதல்வர் பதவியில் அமர்ந்துவிட்டதால், அவர் வகுத்த பாதையில் இருந்து விலகிட முடியாது. இங்கு முதல்வர் என்ற சொல்லைக்காட்டிலும் ‘அம்மா’ என்ற சொல்லுக்கு மதிப்பு அதிகம்.

ஜெயலலிதாவின் கனவுதான் நம் பார்வை. அவர் காட்டிய வழியில் தான் நம் பயணம். அதை தாண்டி யார் நடந்தாலும், நடித்தாலும் அந்த நடையை, நடிப்பை அதிமுக கண்டு பிடித்துவிடும். இத்தனை நாட்கள் வராத எதிர்ப்பு, எதிரிகளிடம் இருந்து புறப்படுகிறது என்றால் என்ன அர்த்தம். எதிரிகள் விரும்பாதது இங்கு நடக்கிறது. அதனால்தான் இந்த சலசலப்பு. இதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது. நானும் அஞ்சமாட்டேன். ஜெயலலிதாவின் கனவுகள் நிறைவேற்றப்பட வேண் டும். எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது.

கட்டாயப்படுத்தினார்கள் என்கி றார். என்னை சட்டப்பேரவை குழுத் தலைவராக முன்மாழிந்தவர், என் அருகில் அமர்ந்து உரையாடினார். 48 மணி நேரம் கழித்து ஒரு பொய்யை சொல்கிறார் என்றால், இடைப்பட்ட நேரத்தில் நடந்தது என்ன? திமுகவைச் சேர்ந்த துரைமுருகன் சட்டப்பேரவையில் பேசியதுபோல், கருத்து வேறு வகையிலும் பரிமாறப்பட்டதா? ஆசை காட்டப்பட்டதா?

சட்டப்பேரவையில் துரை முருகன் பேசும்போது அதற்கு எவ்வித கருத்தையும் தெரிவிக்கா மல் ஓ.பன்னீர்செல்வம் மவுனம் காத் ததில் இருந்தே, அவர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டதை என்னால் உணர முடிந்தது. இதனால், அதிமுக எம்எல்ஏக்கள் கொதிப்படைந்தனர். சட்டப்பேரவையில் திமுக மற்றும் முதல்வருக்கு இடையிலான வார்த்தை பரிமாற்றங்களில் இருந்த உள்அர்த்தம் புரியாமல் இல்லை. அதை அடுத்த கட்டத்தை நோக்கி செல்லாமல் தடுப்பது என் கடமை. குழப்பத்தை ஏற்படுத்த திமுக எடுத்த முயற்சி இது என்பதை ஸ்டாலினின் மகிழ்ச்சி உண்மையாக்கிவிட்டது.

துரோகங்கள் ஒருபோதும் வென்றது கிடையாது. அதிமுகவை என்றும் வெல்லவே முடியாது. நம் எதிரிகள் அவர்களின் சுயரூபத்தைக் காட்டுகின்றனர். நாம் யார் என்று அவர்களுக்கு நிரூபித்துக் காட்டுவோம். நம்மைப் பிரிக்கும் சக்தி யாருக்கும் இல்லை. மக்கள் மத்தியில் உள்ள குழப்பங்களை உரிய நேரத்தில் தீர்த்து வைப்பேன். அதிமுகவின் விரோதிகள் வரிந்து கட்டி வருகிறார்கள். துரோகத்தின் வடிவத்திலும் வருகின்றனர். கட்சி அதற்கு அஞ்சாது.

எம்ஜிஆர் சொன்னதைப்போல், அச்சம் என்பது மடமை, அஞ்சாமை திராவிடர் உடமை, ஆறிலும் சாவு, நூறிலும் சாவு, கட்சியை பாதுகாப்பது நமது கடமை. துரோகமும்- விரோதமும் கைகோர்த்து வந்தாலும் அவை தோற்று ஓடும். தோற்க வைப் போம்.

இவ்வாறு சசிகலா பேசினார்.

தொடர்ந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சசிகலாவின் கருத்துக்களை வரவேற்று பேசினார். அத்துடன் எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தது. பின்னர் எம்.பி,க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டம் பகல் 12.55 மணிக்கு முடிந்ததும் சசிகலா போயஸ் தோட்டம் புறப்பட்டுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x