Published : 22 Dec 2013 03:13 PM
Last Updated : 22 Dec 2013 03:13 PM

பிரணாப் வருகையையொட்டிய போலீஸ் நடவடிக்கை: வைகோ கண்டனம்

குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியின் தமிழக வருகையின்போது, காவல்துறையினர் மேற்கொண்ட கைது நடவடிக்கை அராஜக செயல் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "வரலாற்றில் மன்னிக்கமுடியாத மாபாதகத் தமிழ் இனப்படுகொலையை, சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசு செய்வதற்கு முழுக்க முழுக்க உடந்தையாகச் செயல்பட்ட குற்றவாளிதான் காங்கிரஸ் தலைமை தாங்கும் இந்திய அரசாகும். இந்தக் கொடுங்குற்றத்தில் இந்தியாவின் இராணுவ அமைச்சராகவும், வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் முக்கியப் பங்கு வகித்த பொறுப்பாளிதான் பிரணாப் முகர்ஜி ஆவார்.

குடியரசு தலைவரை, அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது, அவர் குறித்த விமர்சனங்கள் எல்லைகள் வகுக்கப்பட்டு, மரபுகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால், அவர் அமைச்சரவையில் பணியாற்றியபோது தமிழ் இனத்துக்குச் செய்த துரோகத்தையும், இனப்படுகொலையில் உடந்தையாக ஈடுபட்ட குற்றத்தையும், குன்றின் உச்சி மீது நின்று பகிரங்கமாக அசைக்க முடியாத ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவேன். தமிழர் வரலாற்றில் அதற்கு மன்னிப்பே கிடையாது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில், பலாலி விமான தளத்தை இந்திய விமானப்படையைப் பயன்படுத்தி, இந்திய அரசின் பொருட்செலவில் பழுது பார்த்துக்கொடுத்த பாவத்தை பிரணாப் முகர்ஜி செய்ததால்தான், அந்த விமான தளத்தில் இருந்து இÞரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் வாங்கிய போர் விமானங்களை சிங்கள அரசு பயன்படுத்தி செஞ்சோலையில் குண்டு வீசி 61 சின்னஞ்சிறுமிகளைக் கொடூரமாகக் கொலை செய்தது. இந்திய விமானப்படை தந்த ரடார்களின் உதவியால்தான் தமிழர் பகுதிகளில் குண்டு வீச்சு நடத்தி, இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்தது.

உலகத்தில் பல நாடுகள் போர் நிறுத்தம் கோரியபோது, தமிழ்நாட்டுக்கு வந்த பிரணாப் முகர்ஜி, ‘போர் நிறுத்தம் கேட்பது எங்கள் வேலை அல்ல’ என்று ஆணவத்தோடு சொன்னார். மூன்று இலட்சத்து எழுதாயிரம் தமிழர்கள் கொலைக்களத்துக்குள் சிக்கி தவித்தபோது, எழுபதாயிரம் தமிழர்கள்தான் பிரச்சினைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்றும், அவர்களையும் பாதுகாப்பாக சிங்கள அரசு நடத்தும் என்றும், 2009 பிப்ரவரி 18 ஆம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் அப்பட்டமான பொய்யைச் சொன்னவரும் இவர்தான். அதனால்தான் தூத்துக்குடிக்கு அவர் வருகையை எதிர்த்து நானும் தோழர்களும் கருப்புக்கொடி காட்டி, கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டோம்.

இன்று குடியரசுத் தலைவர் பதவி நாற்காலியில் உள்ள அன்றைய பிரணாப் முகர்ஜி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, அவருக்கு எதிர்ப்புத் தெரிவிப்பார்கள் என்று கருதி, தமிழக அரசு காவல்துறையை ஏவிவிட்டு மாணவர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் டிசம்பர் 19 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்து, அடக்குமுறையை ஏவியது.

கலை உலகப் படைப்பாளியும், இயக்குநரும், ஈழத் தமிழ் உணர்வாளருமான கௌதமன் அவர்களை, நள்ளிரவு இரண்டு மணிக்கு அவர் வீட்டில் காவல்துறை கைது செய்தது. லயோலா கல்லூரி மாணவர்களான பார்வைதாசன், ரேமெண்ட், கௌதம், வசந்த் ஆகியோரையும், ஜோதி எனும் சட்டக்கல்லூரி மாணவரையும், பிரபாகரன், கனகராஜ் எனும் பொறியாளர்களையும், ஈழத் தமிழ் இளைஞரான தமிழ் இனியன் என்பவரையும் காவல்துறையினர் நள்ளிரவில் அடித்து இழுத்துக் கைது செய்துள்ளனர். இதில் தமிழ் இனியன் எனும் ஈழத்து இளைஞரை, கைது குறித்து குறுஞ்செய்தி அனுப்பினார் என்று போலீசார் சித்ரவதை செய்துள்ளனர். வயிற்றிலும், உயிர் நிலையிலும் பூட்ஸ் காலால் மிதித்துள்ளனர்.

காவல்துறையினரின் இந்த அக்கிரமம் தமிழ்நாட்டில் ஒரு பாசிச வெறியாட்டத்தின் தொடக்கமாகவே கருதி, இதற்குக் கண்டனம் தெரிவிக்கிறேன். பாம்புக்குத் தலையையும், மீனுக்கு வாலையும் காட்டும் விலாங்குமீன் வேலையை ஈழத்தமிழர் பிரச்சினையில் அண்ணா தி.மு.க. அரசு நடத்துகிறது.

மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து இந்த அராஜகத்தில் ஈடுபட்ட துணை ஆணையரும் சம்பந்தப்பட்ட காவலர்களும் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x