Published : 06 Feb 2017 08:49 AM
Last Updated : 06 Feb 2017 08:49 AM

திருத்துறைப்பூண்டி முதல் புனித ஜார்ஜ் கோட்டை வரை... சசிகலா கடந்து வந்த பாதை

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியில் பிறந்த வி.கே.சசிகலா தமிழகத்தின் 21-வது முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

1956 ஜனவரி 29-ம் தேதி திருத் துறைப்பூண்டியில் விவேகானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியினரின் 6 குழந்தைகளில் 5-வதாக பிறந்தவர் சசிகலா. வனிதாமணி, சுந்தரவதனம், வினோதகன், ஜெயராமன், திவாகரன் ஆகியோர் உடன்பிறந்தவர்கள்.

கருணாநிதி நடத்தி வைத்த திருமணம்:

சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்த சசிகலாவின் வாழ்க்கை திருமணத் துக்குப் பிறகு மாறத் தொடங்கியது. திமுக குடும்பத்தைச் சேர்ந்தவரும், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான மன்னார்குடியைச் சேர்ந்த ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

ஜெயலலிதாவுடன் அறிமுகம்:

தீவிர அரசியலில் இறங்கிய ஜெயல லிதா 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சிய ராக இருந்த சந்திரலேகாவை ஜெயலலி தாவுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் எம்.ஜி.ஆர். கேட்டுக் கொண்டார். இதனால் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியானார் சந்திரலேகா.

அந்த காலகட்டத்தில் கடலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்த நடராஜன் தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார்.

அப்போது ஆழ்வார்பேட்டையில் தம்பி திவாகரனுடன் இணைந்து சசிகலா வீடியோ கடை நடத்திவந்தார். அந்த வீடியோ கடையிலிருந்து ஜெயலலிதா தனக்கு பிடித்த படங்களின் வீடியோக் களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா, ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா:

அந்த காலகட்டத்தில் எஸ்.டி.சோம சுந்தரம், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக்கூட்டம் நடத் தினர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்த பொதுக்கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் ஜெயலலி தாவும் - சசிகலாவும் நெருங்கிய தோழிகளாக மாறினர்.

அதன்பிறகு ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். ஜெயலலிதா எங்கு சென்றாலும் அங்கு சசிகலாவும் பயணிக்கத் தொடங்கினார். அந்த அளவுக்கு இருவரது நட்பும் வளர்ந்தது.

இந்நிலையில், 1987-ல் எம்.ஜி.ஆர். மறைந்தார். அப்போது ஜெயலலிதாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட அதிமுகவின் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். அந்த நேரத்தில் சசிகலா, நடராஜன் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தனர். ராஜாஜி மண்டபத்தில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டிருந்தபோது எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதாவை அங்கு நிறுத்தி வைத்தனர். அவருக்கு பாதுகாப்பாகவும் இருந்தனர்.

சோதனையான நேரத்தில் துணை நின்றவர்:

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், 1989-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா தலை மையிலான அதிமுக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. உடைந்த அதிமுக மீண்டும் ஒரே கட்சியானது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1989-ம் ஆண்டில் திமுக ஆட்சி அமைந்த பின்னர், அரசியலில் இருந்து விலகுவதாக ஜெயலலிதா எழுதி வைத்திருந்த கடிதம் பத்திரிகைகளுக்கு வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதுபோன்ற சோதனையான நேரங்க ளில் ஜெயலலிதாவுக்கு சசிகலா உறுதுணையாக இருந்தார்.

1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தனது வளரப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா அவருக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தினார். இது அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த 5 ஆண்டுகளில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இரு முறை வீட்டை விட்டு அனுப்பப்பட்ட சசிகலா:

இதன் விளைவாக 1996 தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. பர்கூரில் போட்டியிட்ட ஜெயலலிதா தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து சசிகலாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். சுதாகரனை தனது வளர்ப்பு மகன் இல்லை என்றும் அறிவித்தார். ஆனால் சில மாதங்களிலேயே போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா திரும்பினார்.

அதன்பிறகு சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனை ஜெயலலிதா எம்.பி.யாக்கினார். சசிகலாவின் அண் ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் சில ஆண்டுகள் கட்சிப் பொறுப்பில் இருந்தார். இவர்களைத் தவிர சசிகலா குடும்பத்தில் யாருக்கும் ஜெயலலிதா பதவி அளிக்கவில்லை.

கடந்த 2011-ல் ஜெயலலிதா முதல் வரானதும் சில மாதங்களிலேயே சசிகலா உள்பட அவரது குடும்பத்தினர் அனை வரையும் கட்சியில் இருந்து நீக்கினார். போயஸ் தோட்டத்தில் இருந்தும் அவர்கள் வெளியேறினார். ஆனால், 10 மாதங்களில் மீண்டும் சசிகலா போயஸ் தோட்ட இல்லம் திரும்பினார்.

அதன்பிறகு அதிமுகவிலும், ஆட்சி யிலும் சசிகலாவின் செல்வாக்கு அதிக ரித்தது. அவர் பரிந்துரைக்கும் நபர்க ளுக்குதான் பதவி வழங்கப்படுகிறது என பேசப்பட்டது. இந்நிலையில் உடல்நலக் குறைவினால் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.

அதனைத் தொடர்ந்து ஜனவரி 29-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன் தொடர்ச்சியாக நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருத்துறைப்பூண்டியில் பிறந்த சசிகலா படிப்படியாக வளர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வராக பதவியேற்கவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x