Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆரின் 97-வது பிறந்தநாள் விழாவையொட்டி, ஜனவரி 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வரும், கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வியாழக் கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 97-ஆவது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையில், வருகின்ற 18.1.2014 சனிக்கிழமை முதல் 20.1.2014 திங்கட் கிழமை வரை மூன்று நாட்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் மாநகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. மேலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம், கேரளம், புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும்.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்டக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து சிறப்பாக நடத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x