Last Updated : 11 May, 2017 12:14 PM

 

Published : 11 May 2017 12:14 PM
Last Updated : 11 May 2017 12:14 PM

கற்பித்தலில் கலையம்சம் இருந்தால் கணிதப் பாடத்தை ரசனையுடன் கற்கலாம்: கோட்டுச்சேரி ஆசிரியரின் வித்தியாசமான அணுகுமுறை

கணிதக் கருத்துகளை (Mathemetical concepts) காட்சி மற்றும் செயல் வடிவத்தைக்கொண்டு கற்பிக்கும்போது மாணவர்கள் புரிதலோடு கணிதத்தை நோக்கி கவரப்படுகிறார்கள் என்று கூறுகிறார் கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியர்.

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியராக பணிபுரிபவர் சு.சுரேஷ். முன்னாள் ராணுவ வீரரான இவர், மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் நாட்டத்தை ஏற்படுத்தும் வகையில் மிகுந்த சிரத்தை எடுத்து கணிதக் கண்காட்சி, கணிதப் பட்டறை, கணித ஓவியப் போட்டி, கணித பாட்டுப் போட்டி, பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்கும் போட்டி என பலவித முறைகளில் வகுப்பறையில் கற்பிக்கும் திறனைப் பயன்படுத்தி வருகிறார். நாடகம் மூலம் கணிதம் கற்பிக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளார்.

பள்ளியில் கணிதக் கண்காட்சி நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு, உயர் அதிகாரிகளிடம் அதுகுறித்த புரிதலை ஏற்படுத்தி, ஒப்புதலும் பெற்று கடந்த 2008-ம் ஆண்டு முதல், தான் பணியாற்றும் பள்ளியில் இக்கண்காட்சியை நடத்தி வருகிறார்.

இதுகுறித்து ஆசிரியர் சு.சுரேஷ் கூறியதாவது: கணிதக் கண்காட்சிக்காக ஏறக்குறைய 90 கணிதக் காட்சிப் பொருட்களை சாதாரண பொருட்களைக்கொண்டு உருவாக்கியுள்ளேன். மாணவர்களும், அவைகளை உருவாக்குவதன் மூலம் கணித செயல்கள், கருத்துகள் மற்றும் கணிதப் பயன்பாடு ஆகியவற்றை அறிகின்றனர்.

மாணவர்களிடம் சுயமான புரிதலை உருவாக்க கணித ஓவியப் போட்டி என்னும் புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். கணிதப் பட்டறை மூலம் பல்வேறு அளவை முறைகளை தங்களின் கைகளால் மாணவர்கள் அளந்து அறிவதால், அக்கருத்துகள் மறக்காமல் இருக்க வாய்ப்பு கிடைக்கிறது.

சூத்திரங்களை மாணவர்கள் புரிந்து நினைவில் வைத்துக்கொள்ள வசதியாக பல பாடல்களின் வாயிலாக கற்றுக் கொடுக்கிறேன். கணிதப் பாட்டுப் போட்டி வைத்து மாணவர்களை ஊக்குவிக்கவும் செய்கிறேன்.

சிறு வகுப்பில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் வடிவப் பலகை உதவியுடன் பல்வேறு தேற்றங்களை ரப்பர் பாண்ட்களைக்கொண்டு செயல் வடிவில் நிரூபித்துக் காட்டுகிறேன். இம்முறைகளில் கணிதத்தை கற்றுக் கொடுப்பதால், மாணவர்கள் பயம்,வெறுப்பு இல்லாமல் ஆர்வத்துடன் கற்றுக் கொள்கிறார்கள் என்றார்.

அரசு உதவி எதுவும் பெறாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் இத்தகைய கற்பித்தல் செயல்பாடுகளைப் பயன்படுத்தி மாணவர்களிடம் கணித அறிவை ஊக்குவிக்கும் ஆசிரியர் சுரேஷ், கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் கண்காட்சியில் ஆசிரியர்களுக்கான பிரிவில் பல பரிசுகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


சு.சுரேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x