Published : 13 Aug 2016 05:46 PM
Last Updated : 13 Aug 2016 05:46 PM

இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா

மீனவர் வாழ்வாதாரத்தை அழிக்கும் இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், இனையம் மீனவ கிராமத்தில் பலகோடி மதிப்பீட்டில் பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்த துறைமுகத் திட்ட அறிக்கையில் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலின் உட்புறமாக 5 கி.மீ. தொலைவில் துவக்கச்சுவரும், 6.5 கி.மீ. அலைத் தாக்க தடுப்புச் சுவரும், நங்கூரம் பாய்ச்சுவதற்குத் தேவையான 20 மீ. ஆழம் என சுமார் 390 ஹெக்டர் ஏக்கர் நிலப்பரப்பில் மணல் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தென்மேற்குக் கரையோரத்தின் பாரம்பரிய மீன்பிடித் தளமான குளச்சல் /இணையம் பகுதியில் துறைமுகம் அமைவதற்கான தேவை இருக்கிறதா என்றால், நிச்சயமாக இல்லை. அரசின் இந்திய அரிய கனிமங்கள் IRE - (Indian Rare Earths) தவிர்த்து, வேறு எந்தப் பெருநிறுவனமும் இந்தப் பிராந்தியத்தில் இல்லை, அதற்கான சூழலும் இல்லை. பெரும்பாலும் சிறு விவசாயம் மற்றும் கடல் பொருட்கள் சார்ந்த தொழிலும் தான் இப்பகுதியில் உள்ளது. நில அமைப்பு, சரக்கு உற்பத்தி மற்றும் வியாபாரத் தேவை சார்ந்து, சர்வதேசத் தரத்திலான துறைமுகத்துக்கான அடிப்படைத் தேவை இங்கு இல்லை.

ஒவ்வொரு துறைமுகமும் தனக்கான சரக்கு உருவாக்கு தளத்தை (Hinterland) பின்புலமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது துறைமுக நிர்மாணத்தின் முக்கிய அம்சம். இந்தத் துறைமுகம் அமையவிருப்பதாகச் சொல்லப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில், சரக்கு உருவாக்கு மற்றும் உற்பத்தித் தளமே (Achor Industries) இல்லை. இருக்கும் கொஞ்ச நஞ்ச இடமும், அங்கு உருவாகும் சரக்கும், தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தாலும், சென்னை, கொச்சி மற்றும் வல்லார்பாடம் துறைமுகத்தாலும் பங்கிடப்பட்டுவருகின்றன.

குமரி மாவட்ட மீனவர்கள் பொதுவாக பாரம்பரிய முறைப்படி கரையிலிருந்து 5 முதல் 10 வரையிலான கடல்மைல் தொலைவுக்குள் மீன்பிடித் தொழிலை செய்துவருபவர்கள். இந்த புதிய வர்த்தக துறைமுகத்திற்கு மணல் நிரப்பப்படும்போது பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கும்.

தேவையற்ற இந்தப் பன்னாட்டு முனையத்திற்குத் தேவையான நான்குவழிச் சாலை மற்றும் ரயில் பாதைக்குத் தேவையான நிலங்கள் அனைத்தும் ஏழை மீனவர்களின் குடியிருப்பு வீடுகளும், விவசாயிகள் நிலங்களும் ஆர்ஜிதம் செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய்பட்டணம் முதல் குளச்சல் வரையில் வாழும் சுமார் 14 ஆயிரம் மீனவ குடும்பத்தைச் சேர்ந்த 70 ஆயிரம் பேர் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். மேலும் கடல் சார்ந்த சங்கு, சிப்பி தயாரிக்கும் தொழில்களும் முடங்கும் அபாயம் உள்ளது.

துறைமுக கட்டுமான பணியின் போது தேவைப்படும் நீரின் அளவு நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் எனவும், சாலைகள் நிறுவும் பணியின் போது நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டர் நீர் தேவைப்படும் எனவும் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பயன்படுத்தப்படும் குடிநீர் ஆதாரங்கள் வறண்டு போகும் சூழ்நிலை ஏற்படும் அபாயமும் உள்ளது.

எனவே, பல்வேறு வகையில் மீனவ மக்களை பாதிக்கும் இந்த இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x