Published : 31 Aug 2016 09:03 AM
Last Updated : 31 Aug 2016 09:03 AM

தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கைவிட்டு இந்திய மருத்துவக் கவுன்சிலை காக்க நடவடிக்கை: டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தல்

தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கைவிட்டு, இந்திய மருத்துவக் கவுன்சிலை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய மருத்துவக் கழகச் சட்டம் 1933-ன் படி, இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) என்ற அமைப்பு 1934-ல் உருவாக்கப்பட்டது. 1956-ல் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத்தின்படி பழைய சட்டம் மாற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி எம்சிஐ மாற்றி அமைக்கப்பட்டது. இது சட்டரீதியான, தன்னாட்சி அதிகாரம் படைத்த அமைப்பாகும். மருத்துவக் கல்விக்கான தரத்தை நிர்ணயித்து நாடு முழுவதும் சீரான கல்வித்தரத்தை கடைபிடிப்பது, முதுநிலை மருத்துவக் கல்வியை ஒழுங்கு படுத்துவது, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் மருத்துவப் படிப்புகளுக்கும் அங்கீகாரம் வழங்குவது, வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்களுக்கு மருத்துவராக சேவை செய்ய அனுமதி வழங்குவது, தகுதி பெற்ற மருத்துவர்களை பதிவு செய்வது, மருத்துவ சேவையை கண்காணித்து முறைப்படுத்துவது, தவறு செய்யும் டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்றவை இந்த அமைப்பின் பணியாகும்.

இந்த அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததுள்ளன. அதனால் எம்சிஐ-க்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க மத்திய அரசு முயல்கிறது. எம்சிஐயின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அந்த அமைப்பை முற்றிலுமாக ஒழித்துக் கட்டட முனைவது கண்டிக்கத்தக்கது. எம்சிஐ ஊழல் மிகுந்த அமைப்பாக மாறியதற்குக் காரணம், மருத்துவக் கல்வியிலும், சேவையிலும் தனியார் மயமாக்கலை மத்திய அரசு அனுமதித்ததும், அதை ஊக்கப்படுத்தியதும்தான்.

குறைகளை நீக்க வேண்டும்

ஊழலுக்கு எம்சிஐயை மட்டுமே குறை சொல்ல முடியாது. அதில் மத்திய அரசுக்கும் பங்கு இருக்கிறது. ஆனால் எம்சிஐ மீது குற்றச்சாட்டை சுமத்துவது நேர்மையற்ற செயலாகும். எனவே, எம்சிஐயை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கைவிட வேண்டும். எம்சிஐ-யில் உள்ள குறைபாடுகளை நீக்க, அதன் சட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x