Published : 27 Sep 2016 02:53 PM
Last Updated : 27 Sep 2016 02:53 PM

வேலூர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் கார்த்தியாயினிக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு: 14 அதிமுக கவுன்சிலர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

வேலூர் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுகவைச் சேர்ந்த 14 கவுன்சிலர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மேயர் கார்த்தியாயினிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சிக் கவுன்சிலர்களாக போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.கார்த்தியாயினிக்கு

வாய்ப்பு மறுப்பு

வேலூர் மாநகராட்சி மேயர் கார்த்தியாயினி மீண்டும் மேயர் பதவியைக் கைப்பற்ற கடும் முயற்சி செய்தார். மேயர் பதவிக்கு கவுன்சிலராக தேர்வாகி வரவேண்டும் என்பதால் 5 வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கே.வி.குப்பம் தனித் தொகுதியில் போட்டியிட கார்த்தியாயினி முயற்சி செய்தார். ஆனால், கார்த்தியாயினியை முன்மொழிய அமைச்சர் வீரமணி விரும்பவில்லை. கடைசிவரை முயன்ற கார்த்தியாயினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தன்னிச்சையான செயல்பாடு, மாநகர நிர்வாகிகள் இடையே அதிருப்தியால் கார்த்தியாயினியை மீண்டும் மேயராக்க அமைச்சர் விரும்பவில்லை. இதையடுத்து, சென்னையில் உள்ள அரசியல் முக்கிய நபர்களின் உதவியுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால், மாவட்ட அமைச்சரின் பரிந்துரையே இறுதி பட்டியலாக வெளிவந்துள்ளது என அதிமுக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.

மீண்டும் வாய்ப்பு பெற்ற 14 பேர்

தற்போது அதிமுக கவுன்சிலர்களாக உள்ள உமாபேபி, சுகேந்திரன், செல்வி, ரமேஷ், நித்யகுமார், ஏபிஎல் சுந்தரம், ஷகிலா நாராயணன், அன்வர் பாஷா, அயூப் பாஷா, சொக்கலிங்கம், வி.டி.தருமலிங்கம், ஏ.ஜி.பாண்டியன், பிச்சைமுத்து ஆகிய 13 பேரும் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்று தமாகாவுக்கு சென்ற 26-வது வார்டு கவுன்சிலர் பொற்செல்வி ஜெய்சங்கர், சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். அவர் அதிமுக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு வாய்ப்பு

வேலூர் தொகுதி எம்எல்ஏவாக வெற்றிபெற்று சுகாதார அமைச்சராக இருந்தவர் டாக்டர் விஜய். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், வேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட முயற்சி மேற்கொண்டார்.

ஆனால், வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்நிலையில், டாக்டர் விஜய்யின் மனைவி ஜெயந்தி 33-வது வார்டில் கவுன்சிலராக போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, 16-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ததால் தற்போதைய கவுன்சிலர் தாமோதிரன் தனது மனைவி கலையரசிக்கு வாய்ப்பு பெற்றுள்ளார். 22-வது வார்டு கவுன்சிலர் சி.கே.சிவாஜி தனது மகன் சி.கே.எஸ்.வினோத்குமார் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். 60-வது வார்டு கவுன்சிலர் விஜி, தனது மகள் அமலநிருபா போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். 35-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ததால் தற்போதைய கவுன்சிலர் சூளை செல்வம் தனது மனைவி மகேஸ்வரிக்கு போட்டியிட வாய்ப்பை பெற்றுள்ளார்.

மேயர் பதவிக்கு 5 பெண்கள்

வேலூர் மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளர் பட்டியலில் 60-வது வார்டில் போட்டியிடும் அமலநிருபா முதலிடத்தில் உள்ளார். இவரது தந்தை கர்னல் ஒன்றியச் செயலாளராக இருந்தவர். அடுத்தடுத்த இடங்களில் பரிமளா (4-வது வார்டு), உமாபேபி (5-வது வார்டு), மகேஸ்வரி (35-வது வார்டு), ராணி (57-வது வார்டு) ஆகியோர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x