Published : 16 Apr 2017 08:18 AM
Last Updated : 16 Apr 2017 08:18 AM

விவசாயிகளுக்காக திமுக சார்பில் சென்னையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக பங்கேற்பு

விவசாயிகள் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக திமுக சார்பில் சென்னையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடன் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்துப் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் பிரச்சினைக்காக திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி விவாதிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

கட்சிகளுக்கு அழைப்பு

அதன்படி, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்குமாறு அதிமுக, பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் தவிர இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித் துள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று வெளி யிட்ட அறிக்கையில், ‘தமிழகம் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை, அதிர்ச்சி மரணம் தொடர்கிறது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் அடிப் படையில் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுத்து வருகிறது. இப்பின்னணியில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு

கடந்த 2004 மக்களவைத் தேர்தல், 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி யிட்டன. திமுகவுடன் இடைவெளி அதிகமானதைத் தொடர்ந்து 2009 மக்களவைத் தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, அதிமுக கூட்டணியில் இணைந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது திமுக நடத்தும் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்க உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட், விசிக எதிர்ப்பையும் மீறி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் போட்டியிட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்த மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், ‘‘அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சி களுக்கான மாற்று அரசியலை முன்னெடுக்கவே போட்டியிடு கிறோம்’’ என கூறியிருந்தார். இந்நிலையில் திமுக நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x