Last Updated : 01 Aug, 2016 09:09 AM

 

Published : 01 Aug 2016 09:09 AM
Last Updated : 01 Aug 2016 09:09 AM

ராமேசுவரம் நினைவு மண்டப விவகாரம்: அப்துல் கலாம் உறவினர்கள் நிலத்தை ஆக்கிரமித்தார்களா?- உதவியாளர் பொன்ராஜ் குற்றச்சாட்டின் பின்னணி தகவல்கள்

கலாம் நினைவிடம் கட்டு வதற்காக மத்திய அரசு கையகப் படுத்த உள்ள இடத்தை, வாங்கி வைத்துக்கொண்டு பேரம் பேசு வதாக கலாம் உறவினர்கள் மீது உதவியாளர் பொன்ராஜ் கூறிய குற்றச்சாட்டின் பின்னணியில் குடும்பப் பிரச்சினை மற்றும் அரசியல் இருப்பது தெரியவந்துள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் அடக்க ஸ்தல மாகிய ராமேசுவரம் பேக்கரும்பில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான முயற்சியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 27-ம் தேதி அப்துல் கலாமின் முதல் நினைவுதின நிகழ்ச்சிக்கு வந்த கலாம் உதவியாளர் பொன் ராஜ், “பேக்கரும்பு நினைவி டத்தைச் சுற்றி உள்ள நிலங்களை கலாம் சகோதரரின் உறவினர்கள் ரூ.10 லட்சம் கொடுத்து வாங்கி வைத்துள்ளனர். இதனை அரசிடம் கொடுப்பதற்கு ஒன்றரை கோடி ரூபாய் வரை பேரம் பேசுவதாக தகவல் வந்துள்ளது. கலாமின் சகோதரர் தனது உறவினர்களி டம் இந்த நிலங்களை மத்திய, மாநில அரசுகளிடம் ஒப்படைக் கு மாறு அறிவுறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயரின் பேரன் சலீமிடம் கேட்டபோது, “கலாம் நினைவிடம் கட்டப்பட உள்ளது என்றதும், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும், புரோக்கர்களும் இடத்தின் மதிப்பை உயர்த்திச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். நினைவிடத்துக்கான இடத்தைத் தேர்வு செய்வதில் அரசுக்கு உத வத்தான் செய்தோமே தவிர, வேறு எந்தத் தவறையும் நாங்கள் செய்ய வில்லை. தாத்தாவிடம் உதவியா ளராக இருந்த பொன்ராஜ், ‘கலாம் லட்சிய இந்தியா’ என்ற கட்சியைத் தொடங்கியபோது, கலாம் பொது மனிதர், அவர் பெயரில் கட்சி நடத்தவோ, கொடியில் அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தவோ அனுமதிக்கக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்தோம். அதை மனதில் வைத்துக்கொண்டு எங்க ளுக்கு எதிராக அவதூறு பரப்பு கிறார்” என்றார்.

இந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை குறித்து அறி வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தபோது, கலாம் குடும்பத் தினர் எந்தப் பத்திரமும் பதிவு செய்யவில்லை என்பதை உறு திப்படுத்தினர். ஆனால், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் , உள்ளூர் நிலவரத்தை அறிந் தவர்களும் அந்த குற்றச்சாட்டில் கொஞ்சம் உண்மையும், கொஞ்சம் குடும்பப் பிரச்சினையும் இருப்ப தாகச் சொன்னார்கள்.

அவர்கள் கூறும்போது, “கலா முடன் பிறந்தவர்களில் மூத்த அண்ணன் முத்துமீரா மரைக்கா யர் மட்டுமே தற்போது உயிருடன் இருக்கிறார். கலாம் ராமேசுவரம் வரும்போதெல்லாம் அவர் வீட்டுக் குச் செல்வது வழக்கம். கலாம் வீட்டருகே உறவினர் ஒருவர் சங்கு கம்பெனி மற்றும் கலைப்பொ ருட்கள் விற்பனையகம் நடத்தி வந்தார். கலாம் வீட்டைப் பார்க்க வந்த சுற்றுலாப் பயணிகள் அங்கு அதிகமாகச் செல்வதை கவனித்த முத்துமீராவின் பேரன்கள், கலாம் வாழ்ந்த வீட்டின் மாடியிலேயே ‘கலாம் ஆர்கேட்’ என்ற பெயரில் ஒரு சங்குக் கடையைத் தொடங் கினர். கலாம் அருங்காட்சியகத் தைப் பார்க்கும் சுற்றுலாப் பய ணிகள் அனைவரும் அங்கேயும் சென்று பொருட்களை வாங்குகிற வகையில் கடை வடிவமைக்கப்பட் டிருந்தது.

இந்தச் சூழலில் கலாம் மறைந் தார். அதைத் தொடர்ந்து, கலாம் உதவியாளர் பொன்ராஜும், கலாம் பேரன் சலீமும் இணைந்து அறக் கட்டளை ஒன்றைத் தொடங்கினர். கருத்து வேறுபாடு காரணமாக விரைவிலேயே அதிலிருந்து வெளி யேறினார் பொன்ராஜ். பின்னர் அவர் அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சியைத் தொடங்கியபோது, அதை எதிர்த்து சலீம் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், இவருக்கும் இடையே பகை உண்டானது.

இதற்கிடையே, கலாம் நினை விடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்ததால், அதன் அருகிலேயே தனது சங்குக் கடையை நடத்தி னால் நன்றாக இருக்கும் என்று சலீம் தரப்பு கருதியதாகத் தெரிகிறது. உள்ளூர் அரசியல் பிரமுகர் ஒருவர் அங்கு நிறைய கடைகள், அறைகள் கட்டி வாடகைக்கு விடலாம் என்று யோசனை கூறியதால், இடம் வாங்குவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரம் கலாமின் மற்ற உறவினர்கள் மூலம் பொன்ராஜ் கவனத்துக்கு சென்றுவிட்டது. அவர் பத்திரிகைகள் வாயிலாகப் பகிரங்கப்படுத்திவிட்டார்” என்கி றார்கள்.

அரசு என்ன சொல்கிறது?

கலாம் நினைவு இல்லத்துக்கான இடம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ச.நடராஜனிடம் கேட்டபோது, “ஏற்கெனவே 1.36 ஏக்கர் அரசு நிலத்தில் நினைவிடம் அமைந்துள்ளது. தற்போது கூடுதலாக 5 ஏக்கர் நிலம் கேட்கப்பட்டுள்ளது. அதற்காக நினைவிடம் அருகில் உள்ள அரசு நிலம் மற்றும் தனியார் நிலங்கள் அரசு உத்தரவுப்படி ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதில் நினைவிடம் அருகிலுள்ள அரசு நிலத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை தனியார் இடத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படவில்லை. தேவைப்பட்டால் தமிழக அரசின் உத்தரவின்பேரில் தனியார் இடம் கையகப்படுத்தப்படும். நினைவிடம் அருகில் கலாமின் உறவினர்கள் இடம் வாங்கியுள்ளனரா என்பது பற்றி தெரியாது” என்றார்.

“அரசு திட்டங்களுக்கு தனியாரிடம் நிலம் கையகப்படுத்த சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி அரசு தனியாரிடம் நிலம் கையகப்படுத்தினால், அரசு வழிகாட்டுதல் மதிப்பின்படி நிலத்துக்கான தொகையை வழங்கும். கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து நிலத்தை கையகப்படுத்த வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை” என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x