Published : 10 Feb 2016 09:05 PM
Last Updated : 10 Feb 2016 09:05 PM

அதிமுக அரசை விமர்சிக்க ஜி.ராமகிருஷ்ணனுக்கு அச்சம்: கருணாநிதி குற்றச்சாட்டு

அதிமுக அரசை நேரடியாக விமர்சிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருக்கு (ஜி.ராமகிருஷ்ணன்) அச்சம் என திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இரு திராவிட கட்சிகளின் ஆட்சியிலும் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அவர்களின் முன்னேற்றத்துக்காக எதுவும் செய்யவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கூறியிருக்கிறார்.

1967-ல் திமுக, 1977, 1980-ல் அதிமுக, 1989-ல் திமுக, 2001-ல் அதிமுக, 2006-ல் திமுக, 2011-ல் அதிமுக என மாறிமாறி கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற போது இப்படியெல்லாம் குறை சொல்லத் தோன்றவில்லை. ஆனால், தற்போது அவருக்கு மட்டும் திமுக மீது என்னவோ கோபம். அதிமுகவை நேரடியாக விமர்சனம் செய்ய அவர்களுக்கு அச்சம். திமுகவை எப்படி விமர்சித்தாலும் ஜனநாயகத்தில் இது சகஜம் என எடுத்துக் கொள்வோம் என்று அவர்களுக்கு நம்பிக்கை. அதனால் தான் திமுகவை விமர்சிக்கிறார்கள்.

தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

அரசு ஊழியர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அரசின் அனுமதி பெற்றே வழக்கு தொடர வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த அரசாணையை நீதிபதிகளிடம் கொடுத்து வாதிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், உயர் நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்துக்கு முரணாக புதிய அரசாணை வெளியிட்டுள்ள தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு வழக்கறிஞர் புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மாவட்ட ஆட்சியர்கள் ஆளுங்கட்சியினரைப் போல முதல்வரை புகழ்ந்து பேசி வருகின்றனர். ஆட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு சிறிது சிறிதாக மீறப்பட்டு மறைக்கப்பட்டு ஜனநாயக மரபுகழள மங்கி வருகிறதோ என்ற கவலை ஏற்படுகிறது.

அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், அவர்கள் முதல்வரை சந்தித்து பேச முயன்றும் முடியவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

துணைவேந்தர் நியமனத்தில் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார். எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அவசர அவசரமாக பதவியேற்பவர்களும் பரிதவிக்க நேரிடும்.

அதிமுக அரசின் அலட்சியம்

அதிமுக அரசின் அலட்சியம், அக்கறையின்மையினால் திருவண்ணாமலையில் குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இதனை தவிர்த்திருக்க முடியும். முன்கூட்டியே நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மீது பழி போடுவது தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் செயலாகும்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ. 61 கோடியில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை முதல்வர் திறந்து வைப்பதாக செய்தி வந்துள்ளது. இங்கு இருந்த கலைவாணர் அரங்கத்தை விரிவாக்கம் செய்ய கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது. இந்த அரங்கத்தை தான் முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த அரங்கத்துக்கு கலைவாணர் பெயரை வைக்காமல் அவரது பெயரை மறைக்க முயற்சிக்கிறதா என்பது அரங்கம் திறந்த பிறகுதான் தெரியும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x