Published : 17 Sep 2013 02:23 PM
Last Updated : 17 Sep 2013 02:23 PM

தமிழகம் முழுவதும் 71 பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடு நிறுத்தம்: முதல்வர் உத்தரவு

கனிமக் குவாரிகளில் முறைகேடுகளை விசாரிப்பதற்காக, தமிழகம் முழுவதும் கார்னட், இல்மனைட் முதலான 71 பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்திவைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்து வதிலும், அரசாங்கத்திற்கு வருவாயை ஈட்டித் தருவதிலும் கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கனிமங்களை அரசின் முறையான அனுமதியின் றியோ அல்லது அரசு அனுமதித்த அளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரங்க நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக் கூடாது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’, அதாவது ‘பீச் மீனரல்ஸ்’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை எடுக்கப்படுவதாக பெறப் பட்ட அறிக்கைகளின் அடிப் படையில், அரசு உயர் அதிகாரிகளுடன் இது குறித்து கலந்தாலோசித்த நான், தூத்துக்குடி மாவட்டத்தில் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையின் கீழ், வருவாய்த் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்து, இது குறித்து ஒரு மாத காலத்திற்குள் ஆய்வறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டேன்.

இது மட்டுமல்லாமல், இந்தச் சிறப்புக் குழுவின் ஆய்வு முடியும் வரை சுரங்க நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தூத்துக்குடி மாவட்ட கனிமத் துறை உதவி இயக்குநருக்கும் உத்தரவிடும்படி நான் பணித்திருந்தேன்.

எனது உத்தரவின் பேரில், 1957 ஆம் ஆண்டு சுரங்கம் மற்றும் கனிமங் களின் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் பிரிவு 24-ல் மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி மேற்படி சிறப்புக் குழு விரிவான ஆய்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்கொண்டது.

இந்தச் சிறப்புக் குழுவில் முது நிலை மாவட்ட வருவாய் அலுவலர், நில அளவை இணை இயக்குநர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமைச் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர்.

இதைத் தவிர, முதுநிலை துணை ஆட்சியர், நில அளவை உதவி இயக்குநர், நில அளவை ஆய்வாளர் மற்றும் அலுவலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் அல்லது உதவி புவியியலாளர் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மண்டல சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் அடங்கிய ஆறு உப குழுக்கள் அமைக்கப்பட்டு அந்தக் குழுக்களும் ஆய்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மேற்படி குழுக்கள், முதற் கட்டமாக 12.8.2013, 13.8.2013 மற்றும் 14.8.2013 ஆகிய நாட்களிலும், இரண்டாவது கட்டமாக 19.8.2013 மற்றும் 20.8.2013 ஆகிய நாட்களிலும் ஆய்வுப் பணிகளை மேற் கொண்டன. மூன்றாவது கட்டமாக, 29.8.2013 மற்றும் 30.8.2013 ஆகிய தேதிகளில் கனிம பகுப்புத் தொழிற் சாலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

சிறப்புக் குழு மற்றும் உப குழுக்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, அவர்கள் இன்று (17.9.2013) தலைமைச் செயலகத்தில் என்னிடம் ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்தார்.

இதனைப் பெற்றுக் கொண்ட நான், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் கடற்கரை கனிமங்களான கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் ஆகியவற்றை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள குத்தகைதாரர்களால் பெருங்கனிமக் குவாரிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதைக் கண்டறியும் வகையில், தமிழ்நாட்டில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள எஞ்சிய 71 பெருங்கனிம குவாரிகளை இந்தச் சிறப்புக் குழு ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன். வருவாய்த் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் இந்தச் சிறப்புக் குழு செயல்படும்.

மேலும், மேற்படி ஆய்வு முடியும் வரை, கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் பெருங்கனிம குவாரிகளின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்கவும், போக்குவரத்து உரிமச் சீட்டு வழங்குவதை நிறுத்தி வைக்கவும் உரிய உத்தரவினை பிறப்பிக்கும்படி நான் ஆணையிட்டுள்ளேன். இதர மாவட்டங்களில் உள்ள பெருங்கனிமக் குவாரிகள் குறித்த ஆய்வறிக்கை கிடைக்கப் பெற்றவுடன், அதன் அடிப்படையில் பெருங்கனிமக் குவாரிகள் குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x