Published : 12 Apr 2017 02:39 PM
Last Updated : 12 Apr 2017 02:39 PM

குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறந்தால் மக்கள் புரட்சி வெடிக்கும்: அன்புமணி எச்சரிக்கை

குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கும் பணியை தொடர்ந்தால், ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக வெடித்தது போன்று மிகப் பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''என்ன தான் முயன்றாலும் சில விஷயங்களை மாற்ற முடியாது என்பது மதுக்கடைகளை மூடும் விஷயத்தில் தமிழக அரசுக்கு முழுமையாக பொருந்துகிறது. தமிழகத்தில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக இருக்கும் நிலையில், அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல், நெடுஞ்சாலைகளில் மூடப்பட்ட மதுக்கடைகளை குடியிருப்புப் பகுதிகளில் திறக்கும் முயற்சியில் அரசு முரட்டுத்தனமாக ஈடுபட்டுள்ளது.

பாமக சார்பில் வழக்கறிஞர் க. பாலு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் பயனாக தமிழகத்தில் 3321 மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், எத்தனைக் கடைகள் மூடப்பட்டன என்பது குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை.

உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்குள் உள்ள பல மதுக்கடைகள் மூடப்படவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் காட்டி எவரேனும் போராட்டம் நடத்தினால் அதன்பின்னர் கடையை மூடுவது குறித்து தீர்மானிக்கலாம் என்று டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மேலிடம் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி மூடப்பட்ட மதுக்கடைகள் அனைத்தையும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்களிடம் 9-ஆம் தேதி வரை ஓரளவு மென்மையாக நடந்து கொண்ட காவல்துறையினர் 10-ஆம் தேதி முதல் காட்டுமிரண்டித்தனமாக நடந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். அதன்விளைவு தான் திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது காவல்துறையினர் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகும். இந்த வன்முறையைக் கண்டித்து விடியவிடிய போராட்டம் நடத்திய பெண்களும், மக்களும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை அடக்குமுறைக்கு இது ஓர் உதாரணம் மட்டுமே. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போராடும் மக்களுக்கு எதிராக இத்தகைய அடக்குமுறைகளை காவல்துறை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த புளியம்பட்டி என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 220 மீட்டருக்குள் அமைந்துள்ள மதுக்கடையை மூடவேண்டும் என்று வலியுறுத்தி அத்தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், பாமக துணைப்பொதுச்செயலாளருமான ஓமலூர் தமிழரசு தலைமையில் மக்கள் ஒன்றுதிரண்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

முழக்கமிடுதல், ஆர்ப்பாட்டம் செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடாமல் அவர்கள் அமைதியாக இருந்த நிலையில், அவர்களிடம் ஓமலூர் வட்டாட்சியர் ராஜேந்திரன், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சந்திரசேகர் ஆகியோர் பேச்சு நடத்தினர். அதன்படி மேட்டூர் கோட்டாட்சியர் முன்னிலையில் இதுகுறித்து பேசி தீர்வு காணலாம் என வட்டாட்சியர் வாக்குறுதி அளித்தார்.

அதையேற்று பொதுமக்களும் கலைந்து சென்று விட்ட நிலையில், அவர்களை பழிவாங்கும் நோக்குடன் ஓமலூர் தமிழரசு உள்ளிட்ட 100 பேர் மீது மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஓமலூர் வட்டத்திற்குட்பட்ட மேலும் 3 இடங்களில் மதுக்கடைகளை மூட வலியுறுத்திய மக்கள் மீதும் இதேபோன்ற வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பட்டி சக்தி நகரில் குடியிருப்பு பகுதியில் மதுக்கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்புடன் மதுக்கடை திறக்கப்பட்டு வணிகம் நடைபெற்றிருக்கிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கானோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். மதுக்கடைகள் என்ற சமூகத்தீமைக்காக போராடும் மக்களை பாராட்டுவதற்கு பதிலாக, அவர்களை தாக்குவதும், பொய்வழக்குப் பதிவு செய்வதும் ஆட்சியாளர்களின் ஒப்புதலின்றி நடக்காத விஷயங்களாகும்.

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவற்றை அதிரடியாக ஒடுக்காவிட்டால் மற்ற இடங்களில் மதுக்கடைகளை திறக்க முடியாது என்ற எண்ணத்தில் தமிழக அரசு இந்த வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்களின் அடிப்படைத் தேவையான அச்சிக்கலை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமல் மதுக்கடைகளை திறப்பதில் தான் எடப்பாடி பழனிசாமி அரசு தீவிரம் காட்டிவருகிறது. இதன்மூலம் இது மக்கள் அரசு அல்ல... மிடாஸ் அதிபர்களின் பினாமி அரசு என்பதை நிரூபித்துள்ளது.

மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடைகளை திறக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்திருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர பெண்கள் தாங்கள் வாழும் பகுதியில் மதுக்கடை வந்தால் தங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தால் தான் போராடுகிறார்கள். மதுவால் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் தான். தந்தை, கணவன், சகோதரன், மகன் என மதுவுக்கு அடிமையான ஆண்களால் துயரத்திற்கு ஆளாவது அவர்களே. அதனால் தான் அவர்கள் போராடுகின்றனர். அதை உணர்ந்து குடியிருப்புப் பகுதிகளில் மதுக்கடை திறக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மாறாக, மதுக்கடைகளை திறக்கும் பணியை தொடர்ந்தால் அதை எதிர்த்து சட்டப் போராட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக வெடித்தது போன்று மிகப்பெரிய மக்கள் புரட்சி வெடிக்கும். அந்த புரட்சியில் மதுவுக்காக நடத்தப்படும் இந்த மக்கள் விரோத ஆட்சி தூள்தூளாக தகர்க்கப்பட்டு தூக்கி வீசப்படும் என்று எச்சரிக்கிறேன்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x