Last Updated : 18 Jul, 2016 12:23 PM

 

Published : 18 Jul 2016 12:23 PM
Last Updated : 18 Jul 2016 12:23 PM

கதகளி, கரகாட்டத்தில் ஆபாசம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கோயில் விழாக்களில் நடத்தப்படும் கரகாட்டம் மற்றும் கேரளாவின் பாரம்பரிய நடனமான கதகளி ஆகியவற்றில் ஆபாச நடனம், பாடல், வசனம் இருக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக கிராமங்களில் நடைபெறும் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச நடன அசைவுகள் இடம் பெறுவதாக புகார் வந்ததையடுத்து, ஆடல், பாடலுக்கு போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் விழாக்குழுவினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெறுகின்றனர்.

அவ்வாறு அனுமதி வழங்கும் போது ஆபாச பாடல், ஆபாச நடனம், இரட்டை அர்த்த வசனம் இருக்கக்கூடாது, குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்பட 30-க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை நீதிமன்றங்கள் விதிக்கின்றன. அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், தமிழகத்தின் பழமையான கலையான கரகாட்டம், கேரளத்தின் பாரம்பரிய நடனமான கதகளிக்கும், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு விதிக்கப்படும் நிபந்தனைகளை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் அகிலாண்டபுரத்தில் கோயில் விழாவில் ‘கதகளி’ நடனத்துக்கு அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:

கதகளி நடனத்துக்கு அனுமதி வழங்கலாம். அதே நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது. கதகளி நடனத்தை மாலை 6 மணி முதல் இரவு 9 மணிக்குள் நடத்தி முடிக்க வேண்டும். கதகளி நடனத்தில் ஆபாச நடனம், ஆபாச பாடல்கள், ஆபாச வசனங்கள் இடம் பெறுவதை நடன அமைப்பாளர்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அரசியல் கட்சிகள், மதம், ஜாதி சார்ந்த பாடல்கள், நடனங்கள் இடம் பெறக்கூடாது. அரசியல் கட்சிகள், மத தலைவர்களுக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது. மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் மதம், ஜாதி பாகுபாடின்றி நிகழ்ச்சியை நடத்த வேண்டும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் நிகழ்ச்சியின் போது கண்டிப்பாக மது அருந்தக்கூடாது.

நிகழ்ச்சியின் போது எதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு நிகழ்ச்சி அமைப்பாளர்களே பொறுப்பாவார்கள். நீதிமன்றத்தின் நிபந்தனைகளை மீறும்பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இதேபோல், திருச்சி மாவட்டத்தில் பூலாங்குளத்துப்பட்டி தாலுகா வடக்கு அம்மாபட்டியில் மகாசக்தி மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா மற்றும் லால்குடி தாலுகா தரணிபாளையத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆடி திருவிழாவில் கரகாட்டம் நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டன.

இதனை விசாரித்த நீதிபதி பி.தேவதாஸ், கரகாட்டம் தமிழகத்தின் மிக பழமையான கலைகளில் ஒன்று. ராஜாக்கள் காலத்திலும் கரகாட்டம் நடைபெற்றுள்ளது. கரகாட்டம் பார்க்கவருவோர் குடிபோதையில் ஆடுவார்கள். இதனால் பிரச்சினை வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். தமிழக கிராமங்கள் குடியில் இருந்து மீள வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகிறோம். மது குடிப்பவர்களும் கரகாட்டத்தை விரும்புகின்றனர். இந்த காரணத்துக்காக கரகாட்டத்துக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது. எனவே காரகாட்டத்திலும் ஆபாசம் நடனம், ஆபாச பாடல், ஆபாச வசனங்கள் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கப்படுகிறது. என உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x