Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

பாலு மகேந்திரா மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

சென்னை

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்கு நரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா வியாழக்கிழமை காலை மரணமடைந்ததை அடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரோசய்யா, தமிழக ஆளுநர்

பாலுமகேந்திராவின் மறைவு அதிர்ச்சி அளித்துள்ளது. அவரது படங்களில் உள்ள கலை நேர்த்தி அனைவரையும் ரசிக்க வைக்கிற ஒன்றாகும். அவரின் படங்கள் நடை முறையளவிலும், எளிமையான வகையிலும் இருக்கும். இந்திய சினிமாவை உலகளவில் எடுத்துச் சென்றவர்களில் பாலுமகேந்திரா முக்கியமான நபராவார்.

வைகோ, மதிமுக -பொதுச்செயலாளர்

பாலுமகேந்திராவின் மரணச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. ஈழத்தமிழரான பாலுமகேந்திரா இந்திய சினிமா உலகில் 5 தேசிய விருது களையும், 3 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றவர் ஆவார்.

டாக்டர் ராமதாஸ், பாமக-நிறுவனர்

பாலு மகேந்திராவின் மறைவு செய்தி தாங்க முடியாத வேதனையை அளித்துள்ளது. பல்வேறு உச்சங்களைத் தொட்டுள்ளார். பாலுமகேந்திராவின் மறைவு திரையுலகினருக்கு மட்டுமன்றி தமிழ் உணர்வாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

தா.பாண்டியன், இ.கம்யூ-மாநிலச் செயலாளர்:

இயக்குநர் பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களை உருவாக்கியவராவார்.

ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர்

இடதுசாரி இலக்கிய அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த பாலு மகேந்திராவின் மறைவு திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

கவிஞர் வைரமுத்து

“பாலுமகேந்திரா என்னும் கலைஞன் என்று பெளதீக ரீதியாக இல்லாமல் போகலாம், ஆனால் அவர்தன் படைப்புகளின் வாயிலாக என்றென்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார். தமிழ் சினிமாவை இந்திய அளவில் உயர்த்திய அவரின் பட்டறைகளில் உருவான இயக்குநர்கள் அவரது புகழை உயர்த்தி பிடிப்பார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x