Published : 10 Jun 2017 10:04 AM
Last Updated : 10 Jun 2017 10:04 AM

டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு: பள்ளிக் குழந்தைகள் சீருடையில் மறியல்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் ஊராட்சியில் டாஸ்மாக் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்களோடு சீருடை அணிந்த பள்ளிக் குழந்தைகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, தட்டாங்குட்டை - வள்ளிபுரம் ஊராட்சி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். வள்ளிபுரம் ஊராட்சியில் வணங்க முடியனூர், சுள்ளிப்பாளையம், அணைப்பதி, அவரப்பாளையம், காரியங்கராயம்பாளையம், பொத்தாம்பாளையம், வெங்கமேடு ஆகிய கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களில் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர், விவசாயத் தொழிலாளர்கள். வறட்சியால், பலரும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்கின்றனர். குடும்பப் பொருளாதாரம் நலிவை சந்தித்துள்ள நிலையில், வள்ளிபுரம் - வணங்கமுடியனூர், சுள்ளிப்பாளையம் செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். எங்கள் பகுதியில் மதுக்கடை அமைந்தால், குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகும். வீட்டின் பொருளாதாரமும் கடுமையான பாதிப்பை சந்திக்கும்.

வள்ளிபுரம் ஊராட்சி பொதுமக்கள் நலன் கருதி மதுக்கடையை திறக்கக்கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர். பள்ளிக் குழந்தைகள் கூறும் போது, “பள்ளி செல்வதை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். குடிப்பதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், குடும்பங்களில் பெற்றோர்களிடையே நிம்மதி இல்லாத சூழல் நிலவுகிறது. பல்வேறு குடும்பங்களில் தந்தையர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகி குடும்பங்களையும், குழந்தைகளையும் கண்டுகொள்ளாத சூழல் நிலவுகிறது” என்றனர்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் வடக்கு வட்டாட்சியர் மற்றும் பெருமாநல்லூர் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப்படாது என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x