Published : 29 Apr 2017 08:55 AM
Last Updated : 29 Apr 2017 08:55 AM

‘நெருக்கடி நிலைக்கு எதிராக ஒலித்த முதல் குரல்’: இரா.செழியனின் 95-வது பிறந்த நாள் விழாவில் தலைவர்கள் புகழாரம்

நெருக்கடி நிலையை எதிர்த்து முதல்முதலாக குரல் கொடுத்தவர் இரா.செழியன் என அவரது 95-வது பிறந்த நாள் விழாவில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.

மூத்த அரசியல்வாதியும், சிறந்த நாடாளு மன்றவாதியாக திகழ்ந்தவருமான இரா.செழி யனின் 95-வது பிறந்தநாள் விழா விஐடி பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமையில் விழா நடைபெற்றது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் பொன்னை யன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, கே.பாண்டியராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் உள்ளிட்டோருடன் வந்து செழியனுக்கு வாழ்த்துக் கூறினார்.

மேலும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ் ணன், டி.கே.ரெங்கராஜன் எம்பி, தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், முன்னாள் அமைச்சர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், ஆற்காடு வீராசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரா.செழியனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விழாவில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கிப் பேசும் போது, ‘‘21 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினர் பணியை திறம்பட ஆற்றியவர் இரா.செழியன். “அரசியல் தலைவர்கள் பிரச்சினையான நேரங்களில் என்னிடம் ஆலோசனை கேட்க வருவார்கள். எனக்கு ஏதாவது பிரச்சினை எனில் நான் ஆலோசனை கேட்பது செழியனிடம்தான்” என்று அண்ணா கூறுவாராம். 1975-ல் நெருக்கடி நிலையை தைரியத்தோடு எதிர்த்தவர் இரா.செழியன்’’ என்றார். மேலும் தலைவர்களின் பேச்சு விவரம்:

ஆர்.நல்லகண்ணு:

நெருக்கடிநிலைக்கு எதிராக முதல்முதலாக குரல் கொடுத்தது இரா.செழியன்தான். அவரது நாடாளுமன்ற பேச்சுகள் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும்.

ஜி.கே.வாசன்:

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்கப்பட்ட தலைவர் இரா.செழியன்.

பழ.நெடுமாறன்:

நெருக்கடிநிலைக்கு எதிராக ஒலித்த முதல் குரல் இரா.செழியனுடையது. நாடாளுமன்றத்தில் செழியன் ஆற்றிய உரை, யாராலும் ஆற்ற முடியாதது.

ஜி.ராமகிருஷ்ணன்:

ஜெய பிரகாஷ் நாராயணனால் பாராட்டப்பட்டவர் செழியன். பறிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோரும் செழியனை வாழ்த்திப் பேசினர். நிறைவாக இரா.செழியன் ஏற்புரையாற்றினார். முன்னதாக, விழாவுக்கு வந்தவர்களை விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர்கள் சங்கர் விஸ்வநாதன், சேகர் விஸ்வ நாதன், ஜி.வி.செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x