Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM

பேரறிவாளன்: ‘உயிர் வலி’ - சில உண்மைகள்!

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படம் பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் சாத்தியக்கூறுகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. அது ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் குளறுபடிகளை அம்பலப்படுத்துவதுடன் அதிகாரிகளின் கைகளை அரசியல் எவ்வாறு கட்டிப்போட்டிருந்தது என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி யி ருக்கிறது. அப்படத்தின் முக்கிய அம்சங்கள் இவை...



வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை

ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையில் சி.பி.ஐ. எஸ்.பி.யான தியாகராஜன் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலத்தை பதிவு செய்தார். ஆவணப் படத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னிடம் அறிவு (பேரறிவாளன்) வாக்குமூலம் கொடுக்கும்போது ‘அந்த பேட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சொன்னார்கள் என்று தெரியாது’ என்றார். ஆனால், வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததால் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை நான் முழுமையாகப் பதிவு செய்யவில்லை. அவரது முழுமையான வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கே மாறியிருக்கும். தவிர, பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் மட்டுமே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்செயல் எனக்கு மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்” என்று சொல்லியிருக்கிறார்.

விடுதலை செய்ய வேண்டும்!

இந்த ஆவணப் படத்தின் இயக்குநர் பிரகதீஸ்வரன் மற்றும் மரண தண்டனை எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் சென்னை பகுதிச் செயலாளர் செல்வராஜ் முருகய்யன் ‘தி இந்து’விடம், “தூக்குத் தண்டனையை நிறை வேற்றும் முன்பு தண்டனைக் கைதியின் பின்னணியை ஆராய்ந்து, உண்மையிலேயே அந்த நபர் இந்த உலகத்தில் வாழத் தகுதியில்லாதவர்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அதன் அடிப்படையில் பேரறிவாளனின் பின்னணியை அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து, ஆதாரப்பூர்வமாக ஆவணப்படுத்தினோம். இதன் பல்வேறு உண்மைகள் வெளிச் சத்துக்கு வந்துள்ளன” என்றார்.

என் மனசாட்சி என்னைக் கொன்றுவிடும்!

முன்னாள் சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன் தற்போது ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் வசிக்கி றார். அவர் ‘தி இந்து’விடம் கூறு கையில், “வழக்கை விசாரித்த ஆரம்ப காலகட்டதிலேயே அறிவு மீது தவறு இருப்பதாகப் பட வில்லை. அதனால் அறிவுக்கு தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால், தூக்குத்தண்டனை அறிவிக்கப்பட்ட போது அதிர்ச்சி அடைந்தேன். அதில் எனக்கு ஒப்புதலே இல்லை.

அறிவிடம் நான் வாக்குமூலம் பதிவு செய்தபோது, அறிவு சொன்னதை அப்படியே முழுமையாகப் பதிவு செய்வதா அல்லது ஒரு பகுதியை மட்டும் பதிவு செய்வதா என்கிற தர்மசங்கடம் நிலவியது. ஆனால், அன்றைக்கு நான் சி.பி.ஐ. அதிகாரி. அன்றைய காலகட்டம், எனது சூழல் வேறு. இன்றைக்கு எனக்கு வருத்தமாக இருந்தாலும் அன்றைக்கு வேறு மாதிரி என்னால் செய்திருக்க இயலாது. எனக்கு வேறு வழியே இல்லை. ஆனால், நான் பதிவு செய்தது மட்டும் பிரச்சினை இல்லை.

சிவராசன் தகவல் பரிமாற்றத்திலும் ராஜீவ் காந்தி கொலைத் திட்டம் வேறு யாருக்கும் தெரியாது என்கிற தகவல் ஆதாரப்பூர்வமாக சி.பி.ஐ.க்கு கிடைத்தது. அதன்படி அறிவுக்கு இதில் எந்த முகாந்திரமும் இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது. ஆனால், அதிகாரிகள் எதையுமே கருத்தில் கொள்ளவில்லை. இவை தவிர, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும்போது தமிழில் இருந்து வாக்குமூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்கள். அதிலும் குளறுபடிகள் நடந்தன. இதுவும் பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது. இனியும் உண்மையைச் சொல்லாமல் இருந்தால் என் மனசாட்சியே என்னைக் கொன்றுவிடும். அது ஒருநாளும் என்னைத் தூங்கவிடாது என்பதாலேயே காலம் கடந்தாவது உண்மைகளைச் சொன்னேன்” என்றார்.

முதல்வரிடம் மனு

இதற்கிடையே பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் திங்கள் கிழமை தமிழக முதல்வருக்கு இந்த ஆவணப் படத்துடன் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “மூவரின் தூக்குத் தண்டனையையும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி தாங்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள். அதற்கு வலுசேர்க்கும் வகையில் சந்தே கத்துக்கு இடமின்றி பேரறிவாளன் நிரபராதி என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து உங்களிடம் விளக்க சில மணித்துளிகள் ஒதுக்கித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். முக்கியமாக ஒரு நிரபராதி இனியும் சிறையில் வாடக்கூடாது. எனவே, பேரறிவாளனை வெளிக்கொணர தாங்கள் ஏற்பாடு செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்தகாலச் சூழ்நிலை களையும் தற்போதைய வாக்கு மூலங்களையும் பார்க்கும் போது பேரறிவாளனை மட்டு மல்ல... ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதே மனிதத் தன்மையாகும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x