Published : 29 Apr 2017 02:06 PM
Last Updated : 29 Apr 2017 02:06 PM

120% வட்டியே விவசாயிகள் தற்கொலைக்குக் காரணம்: பியூசிஎல் ஆய்வில் தகவல்

காவிரி டெல்டா பகுதிகளில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் அனைவரும் மிகை வட்டி கடனை தனியாரிடமிருந்தும், மைக்ரோ நிதி நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுள்ளார்கள் என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் தனது உண்மை கண்டறியும் விசாரணைக் குழுவின் அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளில் வட்டி விகிதங்கள் என்பது 26 % முதல் 120 % வரை இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதியில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் சொந்தக் காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள சூழ்நிலையில், காவிரி டெல்டா பகுதியில் விவசாயிகள் மரணம் எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை உண்மை கண்டறியும் குழு விசாரணை மூலம் ஆய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது மக்கள் சிவில் உரிமை கழகம்.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜனவரி 17 முதல் 19ம் தேதி வரை நடத்திய கள ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் விவசாயிகள் தற்கொலை மற்றும் இயற்கை மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க காரணங்களாக பட்டியலிடப்பட்டுள்ளவை

இறந்தவர்கள் அனைவரும் மிகை வட்டிக் கடனை தனியாரிடமிருந்தும், மைக்ரோ நிதி நிறுவனங்களிடமும், கூட்டுறவு வங்கிகளிடமிருந்தும் பெற்றுள்ளனர். வட்டி விகிதம் 26%லிருந்து 120% வரை கடனாகப் பெற்றுள்ளனர். இதில் நகை அடமானக் கடனும் அடங்கும். ஒரு சிலர் மட்டுமே தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிடல் கடன் பெற்றுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவரும் கருகிய பயிரை காப்பாற்ற இயலாத துயரத்தாலும், ஈடு செய்ய முடியாத கந்துவட்டி கடன் சுமையாலும் ஆழ்த்தப்பட்டுள்ளனர். வாழ்க்கையில் நம்பிக்கையற்ற, கையறு நிலையில், வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத அவமானத்தை தாங்க முடியாமல் மன உலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது ஒரு வகையில் தற்கொலைக்கு தூண்டும் காரணியாகக் கொள்ள வேண்டியுள்ளது.

இரண்டு ஏக்கருக்கு குறைந்த அளவு நிலம் வைத்திருந்தோர் அதிக அளவில் கடன்பட்டுள்ளனர்.

பயிர்கள் கருகிய நிலையில் 100 நாள் வேலைத் திட்டம் ஓரளவுக்கு ஏழை எளிய மக்களுக்கு உதவியாக இருக்கிறது.ஆனால் வேலை செய்ததற்கான கூலி பல மாதங்களாக வங்கியில் செலுத்தப்படாமல் உள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் அதில் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என்ற கோரிக்கை மிக அழுத்தமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையும் அதன் விவரங்களும் இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட விவாதத்தை எழுப்பும். அதே சமயம் விவாதமாக மட்டும் நில்லாமல் விரைவில் விடை காணப்படவும் வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x