Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

குண்டும் குழியுமாக கிடக்கும் ஊரப்பாக்கம் சாலை- இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதி

சென்னை தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் முக்கிய சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அவதிப்படுகிறார்கள்.

வளர்ந்து வரும் புறநகர் பகுதி

தென்சென்னை புறநகர் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் இடங்களில் ஊரப்பாக்கமும் ஒன்று. காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊரப்பாக்கம், ஒரு முதல்நிலை ஊராட்சி ஆகும். அரசுப் பணியாளர்கள், தனியார் ஊழியர்கள் தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், வியாபாரிகள், நடுத்தர வர்க்கத்தினர், சாதாரண கூலித் தொழிலாளிகள் என அனைத்துத் தரப்பினரும் இங்கு வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் தனி வீடுகள், அடுக்குமாடி வீடுகள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இவை மட்டுமல்லாமல், புதிய குடியிருப்புகளும் உருவாகி வருகின்றன. அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் வங்கிகள், மருத்துவமனைகள், ஏராளமான வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன.

குண்டும் குழியுமான சாலைகள்

அடிப்படை வசதிகள், குடியிருப்புகள் அருகே பள்ளி, கல்லூரிகள் இருப்பதால் இப்பகுதியில் மக்கள்தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து ஊரப்பாக்கம், அய்யஞ்சேரிக்கு உள்ளேயுள்ள பகுதிகளுக்குச் செல்ல முக்கிய சாலையாக இருப்பது அய்யஞ்சேரி மெயின்ரோடு, ரேவதிபுரம், மதுரை மீனாட்சிபுரம், சாஸ்திரி பவன் நகர், அமுதா நகர், அம்பிகா நகர், பாலாஜி நகர், கோதாவரி நகர், வி.பி.கே.நகர், காந்தி நகர், செந்தில் ரயில்நகர், குபேரன் நகர், முத்துவேல் நகர் உள்ளிட்ட இடங்களுக்கு இந்த மெயின் ரோடு வழியாகத்தான் செல்ல முடியும்.

ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி கிட்டதட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், அவ்வழியே பயணம் செய்யும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தினமும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வாகனங்கள் அடிக்கடி பழுது

இரவு நேரங்களில் நிலைமை படுமோசம். நோயாளிகள் இருசக்கர வாகனத்திலோ, ஆட்டோவிலோ செல்லும்போது அவர்களின் வாகனம், சாலையில் பள்ளத்தில் விழும்போது மிகவும் சிரமப்படுகிறார்கள். பல தெருக்களில் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளபோதும் மெயின் சாலை மோசமாக இருப்பது பொதுமக்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

“குண்டும் குழியுமாக கிடக்கும் சாலையில் செல்வதால் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. வாகனத்தின் டயர் மட்டுமின்றி உதிரி பாகங்களும் சேதமடைந்து அவ்வப்போது செலவு வைத்துவிடுகிறது” என்று இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் கூறினார்கள்.

ஊராட்சி தலைவர் பதில்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக அய்யஞ்சேரி மெயின் ரோடு குண்டும் குழியுமாகத்தான் கிடக்கிறது என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதேபோல், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள வைகை நகர் அஞ்சுகண் பாலம் சாலையும் மோசமாக இருப்பதாகவும் ஊராட்சி நிர்வாகம் சாலையை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்றும் அந்த பகுதி பொதுமக்கள் கூறினர்.

முக்கிய சாலையான அய்யஞ்சேரி மெயின் ரோடு மட்டுமின்றி ஊரப்பாக்கம் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று ஊரப்பாக்கம் பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது தொடர்பாக ஊரப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி தலைவர் ஊ.கோ.பெருமாளிடம் கேட்டபோது, “அய்யஞ்சேரி மெயின் ரோடு ரூ.82 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன“ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x