Published : 30 Nov 2014 10:41 AM
Last Updated : 30 Nov 2014 10:41 AM

காங்கிரஸை பலப்படுத்த வீதிவீதியாக செல்வேன்: நடிகை குஷ்பு பேட்டி

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வீதிவீதியாக சென்று மக்களை சந்திப்பேன் என்று அக்கட்சியில் இணைந்துள்ள நடிகை குஷ்பு கூறினார்.

திமுகவில் இருந்து விலகியிருந்த குஷ்பு, கடந்த புதன்கிழமை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். மறுநாள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசினார்.

காங்கிரஸில் சேர்ந்த பிறகு முதல்முறையாக நேற்று தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு குஷ்பு வந்தார். அவரை மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களிடம் குஷ்பு கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியில் சேர்ந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. சொந்த வீட்டில் இருப்பதுபோல உணர்கிறேன். எனது சொந்த ஊர் மும்பை. அப்போது இந்திராகாந்தி, சோனியா காந்தி போன்ற தலைவர்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். 5 ஆண்டுக்கு முன்பு வேறொரு கட்சியில் இருந்தேன். அதற்கு முன்பாகவே காங்கிரஸைப் பற்றி பேசியிருக்கிறேன். இடையில் திசை மாறி போய்விட்டேன். இப்போது மீண்டும் காங்கிரஸ் பக்கம் வந்துள்ளேன்.

காங்கிரஸில் சேர்ந்தது ஏன்?

நான் இஸ்லாம் மார்க்கத்தைச் சேர்ந்தவள். இன்னமும் அந்த மார்க்கத்தைத்தான் பின்பற்றி வருகிறேன். ஆனால் மதம், சாதியைக் கொண்டு சிலர் நாட்டைப் பிரிப்பதை விரும்பவில்லை. எனவேதான் காங்கிரஸில் சேர்ந்துள்ளேன்.

ஆட்சியில் இருக்கும் கட்சியில் சேர்ந்திருந்தால் என்னை சந்தர்ப்பவாதி என்று விமர்சித்திருப்பார்கள். தற்போது எதிர்க்கட்சியில் சேர்ந்துள்ளேன். எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. சோனியாவுக்கும், ராகுலுக்கும் என்னைப் பற்றி நன்றாகத் தெரியும்.

எனக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். காங்கிரஸை பலப்படுத்துவதற்காக வீதிவிதியாக சென்று மக்களைச் சந்திப்பேன். காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும்.

காங்கிரஸ் கட்சி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானது அல்ல. அது தீவிரவாதிகளுக்கு எதிரான இயக்கம். மேலிடம் உத்தரவு பிறப்பிக்கும்போது, தமிழக மீனவர் பிரச்சினைக்காக குரல் கொடுக்கவும் தயாராக உள்ளேன்.

திமுக - காங்கிரஸ் பற்றி நிறைய பேர் கேட்கிறார்கள். இதில் ஒப்பீடு செய்ய என்ன இருக்கிறது. இது தேவையில்லாதது. இதற்கு எப்போதும் பதில் சொல்ல மாட்டேன்.

ஒரு குடும்பத் தலைவி என்ற வகையில் அன்றாட கஷ்டங்களை நன்கு அறிவேன். பொதுமக்களின் கஷ்டங்களை தீர்த்து வைக்கும் கடமை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு உள்ளது. இவ்வாறு குஷ்பு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x