Published : 29 Jun 2017 09:03 AM
Last Updated : 29 Jun 2017 09:03 AM

புதிதாக அமல்படுத்தப்படும் ஜிஎஸ்டி வரி ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமாக அமையும்: மத்திய கலால் மற்றும் சேவை வரி ஆணையர் தகவல்

புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி ஏற்றுமதியாளர்களுக்கு எளிதாக வர்த்தகம் செய்யும் வகையில் அமையும் என மத்திய கலால் மற்றும் சேவை வரி முதன்மை தலைமை ஆணையர் சி.பி.ராவ் கூறினார்.

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (பியோ) ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு அமல்படுத்த உள்ள ஜிஎஸ்டி வரி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான கருத்தரங்கை சென்னையில் நேற்று நடத்தியது. இந்நிகழ்ச்சியில், மத்திய கலால் மற்றும் சேவை வரி தலைமை முதன்மை ஆணையர் சி.பி.ராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசும்போது, ‘‘மத்திய அரசு புதிதாக அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி ஏற்றுமதியாளர்களுக்கு மிகவும் நெகிழ்வு தன்மையுடனும், சாதகமாகவும் இருக்கும். அத்துடன் எளிதாக வர்த்தகம் செய்யும் வகையில் அமையும். மேலும், ஏற்றுமதியாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளோம்’’ என்றார்.

இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் தென்மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல் உரையாற்றும் போது, ‘‘ஏற்றுமதி தொழிலுக்கு தேவைப்படும் இடுபொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், வணிக ஏற்றுமதிக்காக வாங்கப்படும் மூலப் பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 45 சதவீதம் வணிக ஏற்றுமதி அங்கம் வகிக்கிறது. இவர்கள் தங்கள் ஏற்றுமதி பொருட்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகின்றனர். தற்போது ஏற்றுதிமதி செய்யும்போது முன்பு அதற்கான தீர்வையை செலுத்திவிட்டு பின்னர் அதை திரும்பப் பெறும் நடைமுறையை ஜிஎஸ்டி வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால், ஏற்றுமதியாளர்களுக்கு கையில் செயல் மூலதன தட்டுப்பாடு ஏற்படும்.

மேலும், ஏற்றுதிமதி மூலப் பொருட் களுக்கு வரி விலக்கு அளிக்கவில்லை என்றால் 2 சதவீதம் அடக்கச் செலவு கூடும். இதுகுறித்து, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது’’ என்றார்.

இக்கருத்தரங்கில் 400-க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x