Published : 13 Apr 2017 07:51 AM
Last Updated : 13 Apr 2017 07:51 AM

கோயம்பேடு – நேரு பூங்கா இடையே மெட்ரோ சுரங்கப் பாதையில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று ஆய்வு நடத்தினார். இந்தப் பாதையில் அடுத்த மாதம் ரயில் போக்குவரத்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருவழித் தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 19 ரயில் நிலையங்களுடன் 24 கி.மீ. சுரங்கவழிப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. உயர்த்தப்பட்ட பாதையில் விமான நிலையம் - சின்னமலை - கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோயம்பேடு - நேரு பூங்கா வரையிலான முதலாவது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பணி முடிவடைந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் நேற்று ஆய்வு செய்தார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

கோயம்பேடு - நேரு பூங்கா வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்துவிட்டது. இப்பாதையில் 2 நாட்கள் ஆய்வு நடத்த உள்ளோம். இந்த வழித் தடத்தில் திருமங்கலம், அண்ணா நகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம் ஆகிய 6 சுரங்க ரயில் நிலையங்கள் உள்ளன. டிக்கெட் கவுன்ட்டர், நடைமேடைக்கு பயணிகள் எளிதாக சென்று வரும் வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள், கண்காணிப்பு கேமராக்கள், காற்றோட்ட வசதி, தானியங்கி சிக்னல், தீ விபத்து ஏற்பட்டால் பயணிகளை எச்சரித்து வெளியேற்றும் ஏற்பாடு, தீ மற்றும் புகையை அணைத்தல், ரயில் நிலையங்களில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கையாளும் திறன் ஆகிய அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வோம்.

சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதிக்கப்படும். சுரங்கப் பாதையில் மழைநீர் தேங்கினால் அதை வெளியேற்றும் வசதி, பேரிடர் மேலாண்மைக்கான வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு மனோகரன் கூறினார்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால் கூறியதாவது:

மற்ற நகரங்களைவிட சென்னையில் மெட்ரோ ரயில் பணி சவாலாக உள்ளது. கிரானைட் போன்ற உறுதியான பாறை, மண், களிமண் என்று 3 விதமான மண்ணியல் அமைப்பு உள்ளது. அண்மையில் அண்ணா மேம்பாலம் அருகே திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் இருந்து 15 மீட்டர் தாண்டினால் முழுவதும் பாறைகள்தான். இவ்வாறு முழுவதும் பாறையாக இருந்தால் சுரங்கம் தோண்டும் பணி எளிதாக இருக்கும்.

சாலையில் திடீர் பள்ளம் ஏற்படுவது, வெடிப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தவிர்க்க பல துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு அவ்வப்போது ஆய்வும், தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

கோயம்பேடு - நேரு பூங்கா இடையே ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு அவர் குறிப்பிடும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பின்னர், சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்க மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கோரப்படும். அதையடுத்து மெட்ரோ ரயில் போக்குவரத்து முறையாக தொடங்கப்படும்.

அடுத்தகட்டமாக..

அடுத்தகட்டமாக நேரு பூங்கா – சென்ட்ரல், பரங்கிமலை - வண்ணாரப்பேட்டை வரையிலும் போக்குவரத்து தொடங்கப்படும். முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் (45 கி.மீ தொலைவு) அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் 2019-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x