Last Updated : 01 May, 2014 11:15 AM

 

Published : 01 May 2014 11:15 AM
Last Updated : 01 May 2014 11:15 AM

தனியார் எம்பிபிஎஸ் சீட்டுக்கு ரூ.80 லட்சம்?- புகார் வந்தால் நடவடிக்கை: சுகாதாரத்துறை தகவல்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு எம்பிபிஎஸ் சீட்டுக்காக 80 லட்ச ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

இந்நிலையில் லட்சக் கணக்கில் நன்கொடை வசூலிக்கும் கல்லூரிகள் பற்றி புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீத (383) இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 சதவீதம் (2,172) இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.

இதைத்தவிர தமிழகம் முழு வதும் உள்ள 12 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் 1,560 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் கல்லூரி நிர்வாகத்தின் ஒதுக்கீட்டுக்காக 646 எம்பிபிஎஸ் இடங்கள் போக, மீதமுள்ள 914 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

இதே போல சென்னையில் தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக மீதமுள்ள 85 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 18 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு போக, சுமார் 900 பிடிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது.

எம்பிபிஎஸ்

மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) நடத்தும் கவுன்சலிங் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி களில் இடம் கிடைத்தால் மாணவ, மாணவிகளிடம் இருந்து கட்டண மாக ஆண்டுக்கு ரூ.4,800 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில் தனியார் கல்லூரிகளில் நிர்வாகத்தின் மூலம் நிரப்பப்படும் சீட்கள் ஒவ்வொன் றுக்கும் ரூ.40 லட்சம் தொடங்கி ரூ.70 லட்சம் வரை நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிக்கப் படுகிறது. இதைத் தவிர கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.6 லட்சம் வரை வசூலிக்கின்றனர்.

பிடிஎஸ்

கவுன்சலிங் மூலம் சென்னை யில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகளிடம் ஆண் டுக்கு ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடத்திற்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாகத்தின் மூலம் நிரப்பப்படும் ஒவ்வொரு சீட்டுக்கும் நன்கொடையாக ரூ.20 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.

புகார் கொடுத்தால் நடவடிக்கை

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: கல்லூரிகளில் நன்கொடை வசூலிப்பதையும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதையும் தடுக்க நீதிபதி ஒருவர் தலைமையில் ஒரு கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் சுகாதாரத்துறை செயலாளர், ஓய்வு பெற்ற இரண்டு துணை வேந்தர்கள் மற்றும் டிஎம்இ ஆகியோர் உள் ளனர். கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர் பாக மட்டுமே இந்த குழுவிடம் புகார்கள் வருகிறது. லட்சக் கணக்கில் நன்கொடை கேட்பது தொடர்பாக யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை. அப்படி யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்.ஆர்.ஐ.களே அதிகம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களில் சேருவதற்கான முன்பதிவுகள் இப்போதே தொடங்கியுள்ளது. பெரும்பாலும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களே (என்.ஆர்.ஐ) லட்சக்கணக்கில் நன்கொடைகளை கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x