Published : 22 Nov 2014 10:33 AM
Last Updated : 22 Nov 2014 10:33 AM

கூட்டுறவு வங்கியில் யூரியா இருப்பு இல்லை: குறைதீர் கூட்டத்தில் நிரூபித்த விவசாயிகள்

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலக கட்டிடத்தில், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சம்பத்குமார் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட வேளாண்துறை இணை இயக்குநர் சீதாராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சந்திரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் இல்லாத நிலையில் விவசாயிகள் கூட்டம் நடத்தக்கூடாது என வலியுறுத்தினர். மேலும், விவசாயிகளுக்கு எந்த தகவலும் அளிக்காமல், வேளாண் துறை அதிகாரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதால், அனைத்து பகுதி விவசாயிகளும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்ட வேளாண்துறை தொடர்ந்து விவசாயிகளை அலட்சியப்படுத்தி, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது என புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த பேசிய மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் சம்பத்குமார், ‘வேளாண் துறை மீது தெரிவிக்கப்பட்டுள்ள புகார் குறித்து விசாரிக்கப்படும். மேலும், வேளாண்துறை அதிகாரி கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என எச்சரிக் கிறேன். இனி வரும் காலங்களில் இதுபோன்ற புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

பின்னர், மாவட்டம் முழுவதும் உள்ள வேளாண் துறை கூட்டுறவு வங்கிகளில் தேவையான யூரியா உரங்கள் இருப்பு இல்லாததால் பயிர்கள் உரமின்றி கருகி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்த பேசிய மாவட்ட வேளாண் துறை இணை இயக்குநர் சீதாராமன் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், ‘யூரியா தயாரிக்கும் 2 தனியார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளதால், கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால், நமது மாவட்டத்துக்கு தேவையான யூரியா உரம் ஆந்திர மாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்துக்கு 13 டன் யூரியா வந்துள்ளது. இவை வேளாண் துறை கூட்டுறவு வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது’ என்றனர்.

அப்போது, விவசாயிகள் யூரியா அனுப்பப்பட்டுள்ள கூட்டுறவு வங்கியின் விவரங்களை கேட்டனர். அதிகாரிகள் விவரங்களை வழங்கினர். இதில், மதுராந்தகம் வட்டத்துக்கு உட்பட்ட பூதூர் பகுதியில் உள்ள வேளாண் துறைக்கு 20 டன் யூரியா அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த மணி என்ற விவசாயி, தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட வேளாண் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் ‘யூரியா வந்து விட்டதா’ என கேட்டபோது ‘வரவில்லை’ என பதில் அளித்தனர்.

இதையடுத்து மாவட்ட வருவாய்த் துறை அலுவலரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். அப்போது வேளாண் துறை அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர். இதனால், கூட்டத் தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, யூரியா விவரங்கள் குறித்து விசாரிக்குமாறு அதிகாரி களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x