Published : 18 Sep 2016 08:50 AM
Last Updated : 18 Sep 2016 08:50 AM

உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை

உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசிக்க திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவல கமான அண்ணா அறிவாலயத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி, பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், 65 மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

அக்டோபரில் தமிழக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வுள்ளது. தேர்தல் அட்டவணை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளை தொடங்கியுள்ளன. திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை (செப். 19) முதல் 22-ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டது. தற்போது கூட்டணி குறித்து எந்த முடிவையும் திமுக அறிவிக்கவில்லை. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தன.

எனவே, உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியில் இடங்கள் ஒதுக்கப் படும் என அக்கட்சிகள் நம்பிக்கை யோடு காத்திருக்கின்றன.

உள்ளாட்சி தேர்தலுக்கு வியூகம்

இந்நிலையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. உள்ளாட்சித் தேர்தலில் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, வேட்பாளர் தேர்வு, பிரச்சாரம், தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவை எதிர்கொள்வது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக திமுக நிர்வாகி ஒருவர் ‘தி இந்து’விடம் தெரிவித்தார். அதிமுக தனித்துப் போட்டியிடும் நிலையில், கடந்த 2011 தேர்தலைப் போல திமுகவும் கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடலாம் என பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x