Published : 05 Aug 2016 01:05 PM
Last Updated : 05 Aug 2016 01:05 PM

காடுகள் கண்காணிப்பில் வயதான வனக்காவலர்கள்: வேட்டை தடுப்பு காவலர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்களா?

வனக்காவலர் பணியிடங்களில் தோட்டக்காவலராக இருந்து பதவி உயர்வு பெற்ற வயதானவர்களே பெரும்பாலும் பணிபுரிவதால் வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், வனக்காவலர்களாக வேட்டை தடுப்பு காவலர்களை இப்பணிக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக வனவிலங்குகள், மரங்கள், தாவரங்களை பாதுகாப்பதில் வனக்காவலர்கள் பங்கு மிக முக்கியமானது. இவர்கள் தோட்டக்காவலர்களாக இருந்து 50 வயதிற்கு மேல் வனக்காவலராக பதவி உயர்வு பெற்றவர்கள். வயதான இவர்களால் முழுமையாக காடுகளை கண்காணிக்க முடியவில்லை. வனவிலங்குகள் காடுகளை விட்டு வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. அதனால், கடந்த10 ஆண்டாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்களை, கல்வி தகுதி அடிப்படையில் வனக்காவலர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கூறியதாவது:

யானைகள், சிறுத்தைப்புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இறப்பு சமீப காலமாக அதிகரித்துள்ளது. 25 ஆண்டாக சமூக காடுகள் திட்டத்தின் கீழ், கண்மாய்களில் உடை மரங்கள், கருவேலம் மரங்கள் வளர்க்கப்பட்டது. இந்த மரங்களை பாதுகாக்க தினக்கூலி அடிப்படையில் தோட்டக் காவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பணி அனுபவம் அடிப்படையில் ஒரு கட்டத்தில் வனக் காவலர்களாக வனத்துறையில் பணி அமர்த்தப்பட்டு காடுகள், வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். அதனால், இவர்கள் பெரும்பாலும் 50 வயதிற்கு மேலே வனக்காவலர் பணிக்கு வருகின்றனர்.

இந்த வயதில் இவர்களால் காடுகளை முழுமையாக கண்காணித்து வனவிலங்குகள், வனத்தை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் காடுகளில் வனவிலங்குகளை வேட்டையை தடுக்க கடந்த 12 ஆண்டாக வேட்டை தடுப்பு காவலர்கள் பணியமர்ந்தப்படுகின்றனர். வனவிலங்குகளை வேட்டை தடுப்பதில் கடந்த 10 ஆண்டாக இவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். தமிழகத்தில் இவர்கள் 1, 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

2010-ம் ஆண்டு முதல் இவர்களில் 10 ஆண்டாக பணி புரிந்தவர்களை மிகைப்பணியிட வேட்டை காவலர்களாக பணியமர்த்தி அரசு ஆணையிட்டது. இவர்களுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.4,000 அரசு நிர்ணயம் செய்தது. 2013-ம் ஆண்டு இந்த தொகுப்பூதியம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,750 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 3 ஆண்டாக இவர்களுக்கு இந்த ஊதியம்தான் வழங்கப்படுகிறது. சமூக காடுகளில் பணிபுரிந்த தோட்டக்காவலர்கள் எவ்வாறு வனக்காவலர்களாக பணியமர்த்தப்பட்டோர்களோ அதுபோல், வேட்டை தடுப்பு காவலர்களையும் கல்வி தகுதி அடிப்படையில் வனகாவலர்களாக பதவி உயர்வு செய்யும்பட்சத்தில் வனத்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்களையும் நிரப்பலாம் எனத் தெரிவித்தனர்.

பட்டப்படிப்பு முடித்த வேட்டை தடுப்பு காவலர்கள்

வேட்டை தடுப்பு காவலர் பணியிடத்தில் பட்டப்படிப்பு, பிளஸ்-டூ, எஸ்.எஸ்.எல்.சி, முடித்தவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் வயது 25 முதல் 40 வரை உள்ளதால் வனக்காவலர்களாக பதவி உயர்வு பட்சத்தில், காடுகளை பாதுகாப்பதில் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள். தோட்டக்காவலர்களில் இருந்து வனக்காவலராக 50 வயது முதல் 55 வயது வரையே வருகின்றனர். அதனால், வனக்காவலராக இருக்கிறவர்கள் விரைவிலே ஒய்வு பெற்று விடுவதால் வனக்காவலர் காலிப்பணியிடம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x