Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

புதிய நிர்வாகிகள் கூட்டம்: தங்கபாலு அணியினர் புறக்கணிப்பு

கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின் நடந்த தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் கூட்டத்துக்கு மூத்த தலைவர்களை அழைக்கவில்லை என்று கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

மேலும், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆதரவு நிர்வாகிகளில் ஒருவர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். மற்றவர்கள் வரவில்லை. தமிழக காங்கிரஸில், கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின், அதிகாரப்பூர்வமாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். புதிய தலைமை நிர்வாகிகள், துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களுக்கான முதல் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் வியாழக்கிழமை நடந்தது.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தலைமையில், தலைமை நிர்வாகி களுடன் மற்ற நிர்வாகிகள் தனித்தனியே சந்தித்து தங்கள் மாவட்ட நிலைமைகளை எடுத்து உரைத்தனர். அப்போது, மாவட்ட நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதற்கிடையில், காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் ஆர்.கே.வெங்கட், தாமோதரன், சிவலிங்கம், சுந்தரவடிவேல், தனபதி உள்ளிட்ட 9 மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, நிருபர்களிடம் தாமோதரன் கூறும்போது, ‘இந்தக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டசபைத் தலைவர் உள்ளிட்டோரை முறைப்படி அழைக்கவில்லை. இந்தக் கூட்டத்தை ‘இன்பார்மல் மீட்டிங்’ என நடத்த தேவையில்லை. முறைப்படி அனைவரையும் அழைத்து நடத்த வேண்டும். ஆனால், ஒரு சாரார் மட்டும் பங்கேற்று கூட்டத்தை நடத்துகின்றனர். இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மேலிட நிர்வாகிகளுக்கு புகார் அனுப்புவோம்’ என்றார்.

இந்த நிலையில், நிருபர்களுக்குப் பேட்டியளித்த ஞானதேசிகன் கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின், 129ம் ஆண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ’கிராமங்கள் தோறும் காங்கிரஸ்’என்ற யாத்திரையை நடத்தவுள்ளோம். வட்டார அளவிலான நிர்வாகிகள் நியமனம், வரும் டிசம்பருக்குள் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கட்சிக் கூட்டத்தை சில நிர்வாகிகள் புறக்கணித்த சம்பவம் வருந்தத்தக்கது. நாங்கள் எப்போதும் ஒருதலைப் பட்சமாக இருப்பதில்லை. எல்லோருக்கும் பதவி தர முடியாது. கட்சி மேலிடம் பல்வேறு பரிசீலினைக்குப் பின்னரே, நிர்வாகிகள் பட்டியலை அறிவித்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் பங்கேற்கும், அனைத்து நிர்வாகிகளின் அறிமுகக் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அப்போது, அனைத்து செயற்குழு நிர்வாகி களும், எம்.எல்.ஏ.க்களும் அழைக்கப்படுவர் என்று ஞான தேசிகன் கூறினார்.

இதற்கிடையில் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் சத்தியமூர்த்திபவனில் வெளிநடப்பு செய்தது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைமையிலிருந்து டெல்லிக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x