Published : 06 Jun 2016 12:31 PM
Last Updated : 06 Jun 2016 12:31 PM

அயனாவரம் தடியடி சம்பவம்: காவல்துறைக்கு கருணாநிதி கண்டனம்

சாலை விபத்துகளை ஏற்படுத்தியோர் மீது நடவடிக்கை கோரி மறியலில் ஈடுபடும் பொதுமக்கள் மீது போலீஸார் இரக்கமற்ற முறையில் தடியடி நடத்துவது கடும் கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணகிரி அருகே இரண்டு நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சரக்கு லாரி, தனியார் பேருந்து, கார்கள் மீது மோதியதில் 6 பெண்கள் உட்பட 17 பேர் இறந்தார்கள்; 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து, மருத்துவ மனையிலே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்றையதினம் புதுக்கோட்டை அருகே, அரசுப் பேருந்து ஒன்றும், கார் ஒன்றும் மோதிக் கொண்டதில், ஐந்து பேர் பலியாகியிருக்கிறார்கள். அந்தப் பகுதியிலே கடந்த ஆறு மாதத்திற்குள் 7 முறை இது போன்ற கோர விபத்துகள் நடைபெற்றுள்ளதாம். நேற்றைய தினமே, சென்னை அயனாவரத்தில், பத்தாம் வகுப்புத் தேர்வில் தேறி, 11ஆம் வகுப்பில் சேர இருந்த மாணவர்கள் இரண்டு பேர் மீது காவல் துறை வேன் ஒன்று மோதியதால் உயிரிழந்திருக்கிறார்கள்.

மாணவர்கள் மீது போலீஸ் வாகனத்தை ஏற்றி விட்டு, அதிலே இருந்த காவலர்கள் ஓடி விட்டார்களாம். விபத்தை ஏற்படுத்திய போலீஸ் மீது நடவடிக்கை கோரி அந்தப் பகுதியிலே உள்ள பொதுமக்கள் சாலை மறியல் நடத்திய போது, ரணத்தின் மீது உப்பைத் தடவுவதைப் போல, காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்தி, அதிலே 2 மூதாட்டிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டு தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் 16,175 பேர் மரணமடைந்து, இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் வகித்தது.

2013ஆம் ஆண்டு தமிழகத்தில் சாலை விபத்துகளில் 15,563 பேரும்; 2014ஆம் ஆண்டு 15,190 பேரும் மரணமடைந்தனர் என்ற புள்ளி விபரங்கள் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன.

மாபெரும் யுத்தம் ஏற்பட்டால் மரணமடைவோரின் எண்ணிக்கையை விட, சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் சராசரி ஒன்றரை இலட்சம் பேர் இந்தியாவில் மரணமடைகின்றனர் என்று எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இன்று காலை "கலைஞர் தொலைக்காட்சி"யில் எடுத்துச் சொன்ன போது பெரும் அதிர்ச்சி அடைந்தேன்.

அண்மைக் காலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இப்படிப்பட்ட விபத்துகள் ஏற்பட்டு பலர் பலியாவதும், விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டால் காவல் துறையினர் அவர்கள் மீது தடியடி நடத்துவதும் சிறிதும் விரும்பத்தக்கதல்ல; கடுமையாகக் கண்டிக்கத் தக்கதாகும்.

விபத்தில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் வழங்குகிறேன். இரக்கமற்ற முறையில் பொது மக்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்துவதற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்"

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x