Published : 04 Mar 2014 12:00 AM
Last Updated : 04 Mar 2014 12:00 AM

2,242 மையங்களில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது

பிளஸ்-2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ் முதல் தாளில் வினாக்கள் மிக எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. மொத்தம் 2,242 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்குத்தான் தேர்வு தொடங்கும் என்ற போதிலும், 8 மணிக்கே தேர்வு மையங்களுக்கு மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினர்.

மாணவர்கள் நன்றாக தேர்வு எழுத வேண்டி பெரும்பாலான பள்ளிகளில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. கிறிஸ்தவ பள்ளிகளில் சிறப்பு ஜெபம் சொல்லப்பட்டது.

மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வாழ்த்தி, தேர்வுக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். காலை 9.30 மணிக்கு மேல் மாண வர்கள் ஒவ்வொருவராக தேர்வு அறைக்கு செல்லத் தொடங்கினர்.

சரியாக 10 மணிக்கு விடைத்தாள் மற்றும் வினாத்தாள் கொடுக்கப்பட்டது. வினாத்தாளை படித்துப் பார்க்கவும், விடைத்தாளில் தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுதி கையெழுத்திடவும் 15 நிமிடம் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பின் 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர்.

அதிகாரிகள் ஆய்வு

ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களுக்குச் சென்று கண்காணித் தனர். சென்னை கீழ்ப்பாக்கம் சி.எஸ்.ஐ. பெயின் மேல்நிலைப்பள்ளி மையத்தில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் பல்வேறு புதிய நடைமுறைகளை தேர்வுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. மாணவர்கள் கூடுதல் விடைத்தாள் கேட்கும்போது ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் பிரதான விடைத்தாளின் பக்கங்கள் 38 ஆக அதிகரிக்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி

எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள், “தமிழ் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்தது. 38 பக்கங்களுடன் கூடிய விடைத்தாள் கொடுக்கப்பட்டதால் கூடு தலாக தாள் கேட்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பதில் எழுத போதுமான நேரம் இருந்தது” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x