Published : 02 Mar 2014 12:00 AM
Last Updated : 02 Mar 2014 12:00 AM

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் உப்பு ஆராய்ச்சி மையம்: வாசன் உறுதி

எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் தேசிய உப்பு ஆராய்ச்சி மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் உறுதியளித்தார்.

மத்திய அரசின் உப்புத் துறைக்கு சொந்தமான நிலத்தை எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடந்தது.

நிகழ்ச்சியில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் உப்புத் துறைக்கு சொந்தமான 647.8 ஏக்கர் நிலத்தை கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசனிடம் முறைப்படி ஒப்படைத்தார். இந்த நிலத்துக்கான தொகையான ரூ.483 கோடிக்கான காசோலையை சுதர்சன நாச்சியப்பனிடம் ஜி.கே.வாசன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சுதர்சன நாச்சியப்பன் பேசியதாவது:

உப்புத் துறைக்கு 81 ஆயிரத்து 650 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு 647 ஏக்கர் நிலத்தை கேட்டனர். 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த கோரிக்கை இப்போது நிறைவேறி உள்ளது.

மகாத்மா காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரக போராட்டத்தை நினைவு படுத்தும் வகையில், எண்ணூர் துறைமுக வளாகத்தில் உப்பு தொடர்பான ஒரு ஆராய்ச்சி மையத்தை தொடங்க வேண்டும். காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்தை நினைவுபடுத்தும் வகையில் துறைமுகத்தில் நுழைவாயில் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஜி.கே.வாசன் பேசியதாவது:–

காமராஜர் துறைமுகத்துக்கு இந்த நிலம் கிடைத்திருப்பது எதிர்காலத்தில் வர்த்தகத் துக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் அடித்தளமாக அமையும். ஏற்கெனவே இந்த துறைமுகத்துக்கு 2083 ஏக்கர் நிலம் உள்ளது.

காமராஜர் துறைமுகத்தில் கடந்த ஆண்டு 30 மில்லியன் டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. 12வது ஐந்தாண்டு திட்டகாலத்தின் முடிவில் 67 மில்லியன் டன் சரக்குகளை கையாள முடியும். எண்ணூர் துறைமுகத்தின் வளர்ச்சிக்காக பெருமளவில் நிலம் தேவைப்படுகிறது. இந்நிலையில் உப்புத் துறைக்கு சொந்தமான 647 ஏக்கர் நிலத்தை வழங்கியதற்காக அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது கோரிக்கையை ஏற்று எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் உப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கவும், உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவாக நுழைவு வாயில் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜி.கே.வாசன்.

நிகழ்ச்சியில் முன்னதாக எண்ணூர் காமராஜர் துறைமுகத் தலைவர் எம்.ஏ. பாஸ்கராச்சார் வரவேற்றார். கப்பல் துறை இணை செயலாளர் என். முருகானந்தம், சென்னை துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதே நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.4,512 கோடி மதிப்பில் திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி.) முனையம் அமைக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. ரூ.1270 கோடி மதிப்பில் கண்டெய்னர் முனையம் அமைக்க அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x