Published : 13 Mar 2017 12:43 PM
Last Updated : 13 Mar 2017 12:43 PM

ராமேசுவரம் படுகொலையை கண்டித்து குமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ பலியானார். பிரிட்ஜோ படுகொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

வேலை நிறுத்தம்

முதல்கட்டமாக கன்னியாகுமரி சின்ன முட்டம் விசைப்படகு மீனவர் கள் இன்று முதல் இரண்டு நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தாமலிருக்கவும், படகுகள் பறிமுதல் செய்யப் படுவதை தடுக்கவும் நிரந்தரத் தீர்வு காணவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் குமரி கடலோர எல்லையான ஆரோக்கியபுரத்தில் இருந்து கோவளம் வரையிலான கடல் பகுதியிலும் வள்ளம், கட்டுமரம், மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர். தங்கச்சிமடத்தில் நடக்கும் போராட் டத்தில் பங்கேற்று திரும்பிய கன்னியாகுமரி பங்குத்தந்தை நசரேன் மற்றும் மீனவ பிரதிநிதிகள் இதுகுறித்து மீன்வளத்துறையினரிடம் தெரி வித்தனர்.

படகுகள் கரை நிறுத்தம்

மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் சின்னமுட்டத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து வரும் 270 விசைப் படகுகள் இன்று மீன்பிடி துறைமுகத்திலே நிறுத்தி வைக்கப்படும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் கரை நிறுத்தம் செய்யப்படும்.

மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், மெரைன் போலீஸார் மற்றும் மீன்வளத்துறையினர் குமரி கடலோரங்களில் நேற்று முதல் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x