Published : 03 Jan 2016 11:22 AM
Last Updated : 03 Jan 2016 11:22 AM

தமிழகத்தில் மனித உரிமை விழிப்புணர்வு இல்லை: டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

தமிழகத்தில் மனித உரிமை மீறல் குறித்த விழிப்புணர்வு இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.முருகேசன் கூறினார்.

மதுரை சோக்கோ அறக்கட்டளை சார்பில் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் நூற்றாண்டு பிறந்ததின விழா மற்றும் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. அறக்கட்டளை நிர்வாகி மகபூப் பாட்சா வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி, விருதுக்கான நோக்கம் குறித்து பேசினார்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியம், முன்னாள் மகளிர் ஆணையத் தலைவி வசந்திதேவி, கவிஞர் இன்குலாப், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், எஸ்.பி. ஜனநாதன் உட்பட பல்வேறு துறையினருக்கு விருது வழங்கப்பட்டது.

தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான டி.முருகேசன், விருதுகளை வழங்கி பேசியதாவது:

மனித உரிமை போராளியாகத் திகழ்ந்த நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்ய ரின் தீர்ப்புகள், கட்டுரைகள், அவரின் செயல்பாடுகள் இன்றும் மனித உரிமை களை மீ்ட்டெடுப்பதில் முன்மாதிரியாக உள்ளன. மனித உரிமை மீறலுக்கு காவல் துறையும், அரசு இயந்திரங்களும்தான் முதல் காரணம்.

தமிழகத்தில் மனித உரிமை குறித்த விழிப்புணர்வு அதிகம் இல்லை. மனித உரிமை மீறல் தொடர்பாக இந்தியாவில் ஒரு லட்சம் புகார்கள் வருகின்றன என்றால், தமிழகத்தில் இருந்து 4 ஆயிரம் புகார்கள் மட்டுமே வருகிறது. இந்த நிலை மாற எல்லா தரப்பும் குரல் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவுக்கு தலைமை வகித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன், ‘‘சென்னையிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சமீபத்திய மழை நமக்கு உணர்த்தியுள்ளது. பலர் மனித உரிமை என்ற பெயரை போலியாக பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால்தான் மனித உரிமை என்ற பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு கூறினேன். இதனால் உண்மை யிலேயே சேவை செய்பவர்கள் பாதிப்படைந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். உரிமையை பேசி கடமையை மறந்து விடுகிறோம். உரிமை இல்லாத கடமையும், கடமை இல்லாத உரிமையும் பாழாகிவிடும். நாணயத்தின் இருபக்கம் போல கடமையும், உரிமையும் செயல்பட்டால் மனித உரிமை மீறல் இருக்காது’’ என்றார்.

விருது பெற்ற உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் பேசும்போது, ‘‘அரசியல் இல்லாத சட்டம் குருடனைப் போன்றது. சட்டம் இல்லாத அரசியல் செவிடனைப் போன்றது” எனக்கூறி அரசியலும் சட்டமும் கலந்த கலவையாக திகழ்ந்தவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். அவரது வழியை எல்லோரும் பின்பற்றி நடக்க வேண்டும்’’ என்றார். சோக்கோ அறக்கட்டளை துணை இயக்குநர் செல்வகோமதி, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி செண்பகராமன் நன்றி கூறினார்.

தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினரும், டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான டி.முருகேசனிடமிருந்து விருது பெறுகிறார் கவிஞர் இன்குலாப்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x