Published : 12 Mar 2014 04:05 PM
Last Updated : 12 Mar 2014 04:05 PM

தமிழக மீனவர்கள் 116 பேரை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட மீனவ பேச்சுவார்த்தைக்கு முன்னர் தமிழக மீனவர்கள் 116 பேரை படகுகளுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழக - இலங்கை இருநாட்டு மீனவர்களின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 27 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கை சிறைச்சாலைகளில் 177 தமிழக மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் கொழும்பில் நடக்க இருக்கும் பேச்சுவார்த்தைக்கு முன்னர் இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற காவல் முடியும் முன்னரே தமிழக மீனவர்கள் 116 பேர் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் இலங்கை நீதித்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக மீனவர்கள் 116 பேரையும் அவர்களின் 26 விசைப்படகுகளையும் விடுதலை செய்து நீதிபதி லெனின்குமார் உத்திரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் தாயகத்திற்கு ஒரிரு நாட்களில் திரும்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x