Published : 20 Jan 2016 06:22 PM
Last Updated : 20 Jan 2016 06:22 PM

சாதி வெறி வகுப்புவாத கூடாரமாக பல்கலை. மாறக் கூடாது: முத்தரசன்

பல்கலைக்கழகம் சாதி வெறி வகுப்புவாத கூடாரமாக மாறக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மத்திய பல்கலைகழக முனைவர்பட்ட ஆய்வு மாணவரான ரோஹித் வெமுலா கடந்த (26) ஞாயிறு அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பாஜக மத்திய அமைச்சர் பண்டாரு தாத்ரேயா, பல்கலைக்கழக துணைவேந்தர் பி.அப்பாராவ் ஆகியோர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையும், வன்செயல் புரிதல் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

மாணவர், ரோஹித் வெமுலா அம்பேத்கர் மாணவர் சங்கத்துடன் இணைந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தூக்கு தண்டனை முறை ஒழிக்கபட வேண்டும் என போராடியபோதுதான் பிரச்சனை துவங்கி உள்ளது.இதில் நேர் எதிர் கருத்து கொண்ட பாஜக மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி பல்கலைக்கழகத்தில் வன்முறைகளிலும் ஈடுபட்டுள்ளது.

பல்வேறு இந்துத்துவா அமைப்புகளின் தலித் விரோத போக்கும், அதைத் தொடர்ந்து நிர்வாகத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளாலும் ரோஹித் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது வேதனை அளிக்கிறது.

அறிவு பாசறையாக விளங்க கூடிய பல்கலைக்கழகத்தை கூட சாதி வெறி வகுப்புவாத கூடாரமாக மாற்றும் முயற்சிகளில் விளைவு இது என சுட்டிக்காட்டி எச்சரிப்பதுடன், மாணவர் ரோஹித் மரணத்திற்கு காரணமான அனைவர் மீதும் உரிய சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெலுங்கான மாநில அரசையும், மத்திய அரசையும் வலியுறுத்துகிறேன்'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x