Published : 16 May 2017 06:38 PM
Last Updated : 16 May 2017 06:38 PM

போக்குவரத்துக் கழக தொழிலாளர் பிரச்சனையை தீர்க்க வேண்டும்: அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள்

போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர். முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகிய 5 தலைவர்களும் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ''அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக தொடர்கிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு ஆளான இந்த நிலைக்கு தமிழக அரசே காரணம்.

போக்குவரத்துக் கழகங்களின் ஒரு நாள் இழப்பு ரூ.156 கோடி என்றும் இதனை அரசு ஈடுகட்ட வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகங்கள் அரசிடம் கடந்த 2016, மார்ச் மாதமே கோரியுள்ளன. இதை அரசு தனது அரசாணையிலேயே பதிவு செய்துள்ளது. இதற்கான வழிவகைகளை அரசு கடந்த 14 மாதங்களாக செய்யத் தவறியுள்ளது. ஊதிய உயர்வுக்கான பணமும் ஒதுக்கப்படவில்லை.

ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் ஓய்வுக்கால பலன் ரூ. 1700 கோடி நிலுவையில் உள்ளது. தொழிலாளர்களிடம் இருந்து மாதந்தோறும் வைப்பு நிதிக்காகவும், எஸ்ஐசி-க்காகவும், கடன் சொசைட்டிக்காகவும் பிடித்தம் செய்த பணத்தை உரிய இடத்தில் கட்டாமல் செலவழித்துவிட்ட தொகை ரூ. 4500 கோடி. இவை தவிர விடுப்புச் சம்பளம், பஞ்சப்படி நிலுவை போன்ற நிலுவைகள் சேர்த்து ரூ. 7000 கோடி அளவிற்கு தொழிலாளர்களின் பணம் முறையற்று, நெறியற்று, சட்டவிரோதமாக கையாளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் கொடுத்த தீர்ப்புகளையும் மாநில அரசு அமல்படுத்தவில்லை.

போக்குவரத்துக் கழகங்களின் நலனும், தொழிலாளர் நலனும் ஒருசேர புறக்கணிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள இந்த வேலை நிறுத்தத்தை பேச்சுவார்த்தை மூலம் முடிவிற்கு கொண்டு வருவதற்கு பதிலாக வேலைநிறுத்தத்தை உடைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது. பயிற்சியற்றவர்களை வைத்து பேருந்துகளை ஓட்டுவது, தனியார் பேருந்துகளை இயக்குவது போன்ற நடவடிக்கைகளாலும், போலீசைக் குவிப்பதாலும், ஆளுங்கட்சியினரை குவித்து வைத்து மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் காவல் நிற்பதும் மோசமான நடவடிக்கைகளாகும். இதனால் விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே தொழிற் சங்கங்களை அழைத்து பேசி பிரச்சனைக்கு சுமூகத் தீர்வுகாண வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படவேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x