Last Updated : 14 Nov, 2014 12:55 PM

 

Published : 14 Nov 2014 12:55 PM
Last Updated : 14 Nov 2014 12:55 PM

சக்கரத்தின் பின்னால் ஓடுது வாழ்க்கை

வாகன நெரிசலும் அதைத் தோற்கடிக்கும் மக்கள் நடமாட்டமுமாக இருக்கும் ராயப்பேட்டை சாலையிலிருந்து பிரிந்து செல்கிற மாவடி விநாயகர் தெரு, வேறொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. நகரச் சந்தடிகளிலிருந்து விலகி, கிராமத்துக்குள் நுழைந்தது போல இருக்கிறது. வெயில் வெளுத்துவாங்கும் மாதங்களில் எல்லாம் ஒரு காலத்தில் இங்கே மட்பாண்டங்கள் தயாரிப்பும் கொடிகட்டிப் பறந்தது.

இப்போது அதன் மிச்சங்கள் மட்டுமே காணக் கிடைக்கின்றன. பரம்பரைத் தொழிலைக் கைவிட மனமில்லாத சில குடும்பங்கள் மட்டும் இங்கே சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கின்றன. குயவர்கள் வசித்த இடம் என்பதற்கான சாட்சியாகக் கதிர்வேல் உடையாரின் வீட்டு வாசலில் சாத்திவைக்கப்பட்டிருக்கிறது பானை செய்யப் பயன்படும் சக்கரம்.

மண்ணும் உயிர் பெறும் கலை

இரண்டு கை கொள்ளும் அளவுக்குக் களிமண்ணை எடுத்து, பேசிக்கொண்டே பக்குவமாகப் பிசைகிறார் கண்ணன். லேசாக அழுத்தம் கொடுத்தும் தடவிக் கொடுத்தும் உருட்டிய அந்தக் களிமண்ணைச் சக்கரத்தின் மீது வைக்கிறார். சக்கரம் சுற்றச் சுற்ற களி மண்ணைத் தடவிக்கொடுத்தபடியே இருக்கிறார். களிமண்ணின் மேல்பக்கம் லேசாக அழுத்தம் கொடுக்க, குழி விழுகிறது.

அதை அப்படியே இன்னும் கொஞ்சம் பெரிதாக்கி, அதனுள்ளே விரல்களால் தடவியபடியே இருக்கிறார். இடையிடையே விரல்களில் சிறிது தண்ணீர் தொட்டுக் கொள்கிறார். சிறிதும் கவனப் பிசகின்றிப் பானையிலேயே கண்ணாக இருக்கிறார் கண்ணன். கட்டை விரலால் அழுத்தம்

கொடுத்து கழுத்துப் பகுதியை உருவாக்குகிறார். விரல் நுனியால் லேசாகக் கீறி கழுத்துப் பகுதியின் கீழே கோடு வரைகிறார். பானையின் வாய்ப்பகுதியைக் கச்சிதமாகச் செதுக்குகிறார். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் சக்கரத்தில் இருந்து பானையை எடுக்கிறார். சாதாரண களிமண், பானையாக உயிர்பெறும் அந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாலும் சலிக்காது. ஈர மினுமினுப்புடன் இருக்கும் பானை சிறிதும் நெளிந்துவிடாதபடி கவனமாகத் தரையில் வைக்கிறார்.

அடுத்தாக அகல் விளக்கு செய்யத் தயாராகிறார். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அழகாகத் தயாராகின்றன அகல் விளக்குகள். விளக்கைச் சக்கரத்திலிருந்து எடுத்ததுமே திரி ஏற்ற வசதியாக விளிம்பை மடித்துவிடுகிறார். நிச்சயம் நாம் கையில் வாங்கினால் இளகிவிடும். அந்த அளவுக்குக் குழைவாக இருக்கிறது அந்த அகல் விளக்கு. அதைச் சிறிதும் சேதாரமின்றி லாகவமாகத் தரையில் வைக்கும் திறமையை எந்தக் கல்லூரியில் பயின்றிருப்பார்?

“நான் ஸ்கூல் படிப்பையே முழுசா முடிக்கலை. இதெல்லாம் கண் பார்த்துக் கை செய்யற வேலை. ஒரு நாள்ல எல்லாம் இது வந்துடாது” என்று சொல்லும் கண்ணன் 15 வயதில் இருந்தே பானை வனையும் தொழிலுக்கு வந்துவிட்டார். திருக்கழுக்குன்றத்துக்குப் பக்கத்திலிருக்கும் நெருப்பூர்தான் இவர்களுடைய பூர்வீகம் என்றாலும் பல வருடங்களுக்கு முன்பே சென்னை சாலிகிராமத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டார்கள்.

மெருகேற்றும் பெண்கள்

இப்படி விளக்குகளையும் பானைகளையும் வனைவதோடு ஆண்களின் வேலை முடிந்துவிடுகிறது. அடுத்ததாக அவற்றைக் கையில் எடுக்கிறார்கள் பெண்கள். வனைந்தவற்றை வெயிலில் காயவைத்து எடுக்கிறார்கள். பிறகு அவற்றின் மீது செம்மண் கரைத்துப் பூசி மீண்டும் காயவைக்கிறார்கள். பானைகளின் மீது கொசுவலை போன்ற சொரசொரப்பான பொருளால் தேய்த்துத் தேய்த்து மிருதுத் தன்மையை உருவாக்குகிறார்கள். பிறகு அவை சூளையில் சுட்டெடுக்கப்படுகின்றன.

“எனக்குக் கல்யாணமான நாள்ல இருந்து இதைத்தான் செய்யறேன். எங்க வீட்ல யாரும் பானை செஞ்சதில்லை. அதனால இவர்கிட்டே எல்லாத்தையும் கத்துக்கிட்டு செய்யறேன்” என்கிறார் கண்ணனுடைய மனைவி தேவி.

தன் வீட்டுப் பெரியவர்களிடமிருந்து தொழில் கற்றுக்கொண்ட கண்ணன், தன் மகனுக்கு இந்தத் தொழிலில் விருப்பம் இல்லை என்கிறார்.

“இந்தக் காலத்துல இதுல என்ன வருமானம் கிடைக்கும்? அதனால பசங்க படிச்சு முடிச்சிட்டு வேற வேலைக்குப் போகணும்னு நினைக்கிறாங்க” என்கிறார் கண்ணன்.

கலைஞனின் ஏக்கம்

கதிர்வேல் உடையாரின் வீட்டுப் புழக்கடையில் அடுக்கிவைக்கப் பட்டிருக்கின்றன பானைகள். இன்றைக்கு உட்கார்ந்து எழுவதற்கே சிரமப் படுகிறவர் ஆளுயர பானைகளைச் செய்த கைகளுக்குச் சொந்தக்காரர். வந்தவாசியை அடுத்த வாச்சனூர் சொந்த ஊராக இருந்தாலும் சிறு வயதிலேயே சித்தப்பாவைத் தேடிச் சென்னைக்கு வந்துவிட்டார். அன்று முதல் களிமண்ணோடு பிணைந்துவிட்டது கதிர்வேல் அய்யாவின் வாழ்க்கையும். அனைத்து விதமான மட்பாண்டங் களையும் அற்புதமாக வார்த்தெடுத்த இவர், கடங்கள் செய்வதிலும் திறமை வாய்ந்தவர். தான் நேசிக்கும் வேலையைத் தொடரவிடாமல் தடுக்கும் மூப்பை நொந்துகொள்கிறார்.

“எனக்கு எண்பத்தோரு வயசாவுது. இந்தக் கையால எவ்வளவோ செஞ்சிருக்கேன். இப்போ உடம்பு ஒத்துழைக்க மாட்டேங்குது. கண்ணும் சரியா தெரியலை. இவ்ளோ நாள் சோறு போட்ட தொழிலை விட்டுட முடியுமா? அதான் இன்னொருத்தர் கிட்டேயிருந்து பானைகளை வாங்கியாந்து விக்கறேன்” என்கிறார் கதிர்வேல் உடையார். ஒரு பானையைக் கையில் எடுத்துத் தட்டிச் சரிபார்க்கிறார். அந்தச் செய்கையில் வெளிப்படுகிறது குழந்தையைக் கொஞ்சும் ஆதூரம்.

அழியும் பாரம்பரியம்

ஒரு காலத்தில் அடுக்கடுக்காகப் பானைகள் செய்த கண்ணன், இப்போது தன் வீட்டுத் திண்ணையளவுக்கு அதைச் சுருக்கிக்கொண்டிருக்கிறார். திருமணச் சடங்குகளும் கோயில் பிராகாரங்களும் மட்டுமே இவர்களுக்கு வேலை வழங்கிக்கொண்டிருக்கின்றன. இப்போது அங்கேயும் வந்துவிட்டன டிசைனர் அகல் விளக்குகள். வேலையில்லாததால் மரத்தடியில் அமர்ந்து தாயம் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் பானை செய்கிறவர்களின் வீட்டுப் பெண்கள்.

மண் பானைகளில் பொங்கி வழிந்த பொங்கல் என்றைக்குப் பித்தளைக்குத் தாவி, எவர்சில்வருக்கு மாறி, குக்கருக்குள் குமைந்ததோ அன்றைக்கே ஆரம்பமாகிவிட்டது ஒரு பாரம்பரிய தொழிலின் இறுதி அத்தியாயம். நம் முன்னோர் காலகாலமாகப் பயன்படுத்திவந்த பொருட்களை நவீனமயமாக்கல் என்ற ஒற்றை வார்த்தையால் தூக்கியெறிந்து விட்டோம்.

காலத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, நம் உடம்புக்கு ஊறு விளைவிக்கும் பொருட்களைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். எதையுமே பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறிந்தே பழக்கப்பட்டவர்கள், கொஞ்சம் வேகமாக வைத்தாலும் உடைந்துவிடும் மட்பாண்டங்களை எப்படிப் பயன்படுத்துவார்கள்?

அன்றாடப் பயன்பாட்டுக்கு நாம் மட்பாண்டங்களைப் பயன்படுத்துவதில் இரண்டு நன்மை இருக்கிறது. ஒன்று உடல் நலத்துடன் மன நலத்தையும் மேம்படுத்திக் கொள்ளலாம். காரணம் மட்பாண்டங்களைக் கையாளக் கவனமும் பொறுமையும் அவசியம். இவை இரண்டும் கைவரப் பெற்றாலே மனம் எப்போதும் தெளிவுடன் இருக்கும். மற்றொன்று அழிவின் விளிம்பில் இருக்கும் நம் பண்பாடு பகரும் தொழிலை மீட்டெடுக்கலாம்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x